ரயில்கள் உள்ளிட்ட பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்களை கண்டதும் மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் ரயில்வே போலீசார் சுட வேண்டும் என்று மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி தெரிவித்துள்ள கருத்தால் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
19 வருடத்திற்கு முன்பு சச்சினுக்கு சென்னை ரசிகர் கொடுத்த பேட்டிங் டிப்..
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனையடுத்து ஆங்காங்கே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், மத்திய அமைச்சரின் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில், பத்திரிகையாளர்களை மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்காடி சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து கேட்டதற்கு, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நடைபெற்ற போராட்டங்களின் போது ரயில்கள் தீக்கிரையாகின. ரயில் நிலையங்கள் சூறையாடப்பட்டன. இதனால் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ரயில்வே சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்படுவது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ரயில்கள் உட்பட எந்த பொதுச் சொத்துக்கு யார் சேதப்படுத்தினாலும் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சி.ஏ.ஏ-க்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்...
அவர் மேலும் கூறியதாவது, புதிய சட்டத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் சில சமூகவிரோத சக்திகள், நாட்டில் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சட்டத்தின் மூலம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் சிறுபான்மையினராக உள்ளவர்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு வழங்க வழிவகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் சிறுபான்மையினராக உள்ள சில சமூகமக்களால் நடத்தப்படும் இந்த போராட்டங்களின் பின்னணியில்,காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உள்ளன. இந்த போராட்டங்களால், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்த அராஜக போக்கை கண்டிக்கிறேன்.
ரயில் உள்ளிட்ட பொதுச்சொத்துகளை கட்டமைப்பதற்கு நீண்டநாட்கள் தேவைப்படுகின்றன. மக்கள் செலுத்துகின்ற வரிப்பணத்தின் மூலமே, இந்த தேவைகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. ரயில்கள் உள்ளிட்ட பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துவர்களை கண்டதும் சுட ரயில்வே அதிகாரிகள் , மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.