ஆயுத பூஜை, தீபாவளி மற்றும் சாத் பண்டிகையொட்டி இந்தியன் ரயில்வே பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு ரயில் சேவை அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் 1-ம் தேதி முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரை 6,556 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில்வே அதிகாரிகளின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அந்த வகையில் இந்தாண்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வருகைக்கு ஏற்ப ரயில்களின் எண்ணிக்கை இந்தாண்டு கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.
தெற்கு ரயில்வேவை பொறுத்தவரை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களை இணைக்கும் வகையில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவை, திருவனந்தபுரம், மங்கரூரு, பாலக்காடு ஆகிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
அதே போல் தென் மாநிலங்களில் இருந்து பிகார், உ.பி, ராஜஸ்தான் ஆகிய வடமாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது.
கொச்சுவேலி - நிஜாமுதீன், சென்னை - சாந்த்ராகாச்சி, தாம்பரம் - ராமநாதபுரம், திருச்சி - தாம்பரம், தாம்பரம் - கோயம்புத்தூர் (மெயின் லைன் வழியாக, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் திருச்சி சேவை) திருநெல்வேலி - ஷாலிமார், ஈரோடு - சம்பல்பூர் - சிறப்பு ரயில்கள் சேவையில் அடங்கும். - தன்பாத், கோயம்புத்தூர் - சென்னை எழும்பூர் - போதனூர், சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில், மதுரை - கான்பூர், கொச்சுவேலி - லோகமான்ய திலகர், கொல்லம் - விசாகப்பட்டினம் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளன.
தாம்பரம்- கோவை சிறப்பு ரயில்
ரயில் எண். 06184 தாம்பரம்- கோயம்புத்தூர் வாராந்திர சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 11, 18, 25 , நவம்பர் 01, 08, 15, 22, 29 (வெள்ளிக்கிழமைகளில்) மாலை 6 மணிக்குப் புறப்பட்டு மறு நாள் காலை 10 மணிக்கு கோவை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் ரயில் எண். 06185 கோயம்புத்தூர்- தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபர் 13, 20, 27 மற்றும் நவம்பர் 03, 10, 17, 24 மற்றும் டிசம்பர் 1 (ஞாயிற்றுக்கிழமைகளில்) கோவையில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், சென்னை எழும்பூர்- கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
எழும்பூரில் இருந்து அக். 10 மற்றும் 12ம் தேதிகளிலும் கன்னியாகுமரியில் இருந்து 11 மற்றும் 13ம் தேதிகளிலும் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“