ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தொடங்கி பலரும் பாரபட்சமின்றி ரயில் பயணங்களை விரும்புவர். குறிப்பாக, குறைந்த கட்டணத்தில் வசதியாகவும், விரைவாகவும் செல்ல ரயில் பயணம் வழிவகை செய்வதால், லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணங்களை தேர்வு செய்வார்கள்.
இதனிடையே, ரயில்வே நிர்வாகம் சார்பிலும் அவ்வப்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி, ரயில்களில் பயண டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை 120 நாள்களில் இருந்து 60 நாள்களாக குறைத்து ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் டிக்கெட்டுகளை 100 நாள்களுக்கு முன்பே முன்பதிவு செய்து, பின் சில காரணங்களுக்காக அதனை ரத்து செய்வதை தவிர்க்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே, ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் 60 நாள்களாக இருந்த போது, கடந்த 2015-ஆம் ஆண்டில் தான் அதனை 120 நாள்களாக உயர்த்தி உத்தரவிடப்பட்டது. தற்போது மீண்டும் முன்பதிவு கால அவகாசம் 60 நாள்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை நவம்பர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ள டிக்கெட்டுகளுக்கு இவை பொருந்தாது எனவும், அதற்கான பயணங்களை மேற்கொள்வதில் பயணிகளுக்கு தடையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிக்கெட் முன்பதிவு கால குறைப்பு பகல் நேரங்களில் இயங்கும் கோம்தி எக்ஸ்பிரஸ், தாஜ் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களுக்கு பொருந்தாது என ரயில்வே வாரியம் குறிப்பிட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு காலமான 365 நாள்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“