ரயில்களில் ஏசி வகுப்பில் பயணிகள் பயன்படுத்தும் போர்வைகள் இனி வரும் காலங்களில் மாதத்திற்கு இரண்டு முறை துவைக்கப்படும் வேண்டும் என்று இந்தியன் ரயில்வே அனைத்து மண்டலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
ரயில்களில் ஏசி வகுப்பில் பயணிக்கும் பயணிகளுக்கு போர்வைகள் தரப்படுவது வழக்கம். இரு நாளைக்கு இந்திய ரயில்வே தனது பயணிகளுக்கு 3.90 லடசம் கம்பளிகள் வழங்குகின்றன. அந்த வகையில் இதுவரை பயணிகளுக்கு கம்பளி போர்வைகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் இனிவரும் காலங்களில் பயணிகளின் வசதிகேற்ப அவர்களுக்கு நைலான் கலந்து தயாரிக்கப்பட்ட போர்வையை வழங்க வேண்டும் என்று இந்தியன் ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
இதுக்குறித்து இந்தியன் ரயில்வே அனைத்து மண்டலங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. அதில், இதற்கு முன்பு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த கம்பளி இரண்டு மாதத்திற்கு ஒரு முறை சலவை செய்யப்பட்டு வந்தது. இனிமேல் சலவை செய்வதற்கு எளிமையாக இருக்கும் வகையில் நைலான் கலந்து தயாரிக்கப்பட்ட போர்வையை பயணிகளுக்கு வழங்க வேண்டும். புதிய வகை போர்வைகள் 450 கிராம் எடைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
அதை மாதத்திற்கு இரண்டு முறை கண்டிப்பாக துவைக்க வேண்டும். அதே போல் 2 ஆண்டுகளுக்கு மட்டுமே இந்த போர்வையை பயன்படுத்த வேண்டும். என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைலான் கலந்த போர்வையின் விலை ஏறத்தாழ இரு மடங்கு அதிகமாக இருக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.