ராஜஸ்தான் மாநிலத்தில், சொத்துக்களை கவனித்துக் கொள்வதற்காக 83 வயது முதியவர் ஒருவர், இளம்பெண்ணை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.
ராஜஸ்தான் மாநிலம் சம்ரதா கிராமத்தை சேர்ந்தவர் சுக்ரம் பைரவா (வயது 83). இவருக்கு பட்டோ என்ற மனைவியும், திருமணமான இரண்டு மகள்களும் உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இத்தம்பதியரின் ஒரேயொரு மகன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
இந்நிலையில், ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் உள்ள நிலம் உள்ளிட்ட கணிசமான சொத்துகளை கவனித்துக் கொள்வதற்காக, சுக்ரம் பைரவா 30 வயது பெண்ணை இரண்டாம் திருமணம் செய்துகொண்டுள்ளார். அப்பெண் மூலம் ஆண் குழந்தை பெற்றுக்கொள்ளவே இத்திருமணத்தை செய்துகொண்டதாக சுக்ரம் பைரவா தெரிவித்துள்ளார். இத்திருமணத்திற்கு பைரவாவின் முதல் மனைவியும் ஒப்புதலுடன் நடைபெற்றது. இதில், 12 சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் இத்திருமணத்திற்கு வந்திருந்தனர்.
முதல் மனைவி இருக்கும்போதே சுக்ரம் பைரவா இரண்டாம் திருமணம் செய்துகொண்டது மாவட்ட அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டாம் திருமணம் செய்துகொண்ட சுக்ரம் பைரவா மீதும், அதற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.