இந்தியாவில் முதல் முதலாக ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் சுகாதார உரிமை மசோதா நேற்று (மார்ச் 21) செவ்வாய்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் மாநிலத்தில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் அனைத்து பொது சுகாதார வசதிகளையும் இலவசமாக பெற முடியும். அரசு, சில தனியார் மருத்துவமனைகளில் உள் நோயாளிகள், புற நோயாளிகள் சேவையை இலவசமாக பெற இந்த சட்டம் வழிவகுக்கிறது.
அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தைப் போன்று மருத்துவ சேவைகளையும் இலவசமாக பெறும் உரிமை மக்களுக்கு வேண்டும் என்பதை இச்சட்டம் வலியுறுத்துகிறது.
இந்த சட்ட விதிகளில் சில மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என பா.ஜ.கவும், சட்டத்தை நிறைவேற்றக் கூடாது என சில மருத்துவர்களின் போராட்டத்தையும் மீறி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவின்படி, "அனைத்து பொது சுகாதார நிலையங்களிலும் ஆலோசனை, மருந்துகள், நோயறிதல், அவசரகால போக்குவரத்து, அவசர சிகிச்சை உள்ளிட்ட சேவைகளை இலவசமாக பெற முடியும். மேலும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு சில தனியார் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை பெறலாம்" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் அவசர காலங்களில் எவ்வித முன் கட்டணமும் இல்லாமல் சிகிச்சை பெற மக்களுக்கு உரிமை அளிக்கிறது. சட்டம் மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கு மொத்தம் 20 உரிமைகளை வழங்குகிறது.
அரசாங்கத்தின் கூற்றுப்படி, "சட்டப்பிரிவு 47-யின் படி (ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது மற்றும் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவது அரசின் கடமை) சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. .
இந்த மசோதா கடந்த ஆண்டு செப்டம்பரில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சியான பாஜக மற்றும் மருத்துவர்களின் ஆட்சேபனையைத் தொடர்ந்து தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.
நேற்று மசோதா மீதான விவாதத்தின் போது, பா.ஜ.க 2 வகை எதிர்ப்புகளை முன்வைத்தது. தனியார் மருத்துவமனைகளைப் பொறுத்தவரை 50 படுக்கைகள் கொண்ட மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் மட்டுமே இந்த மசோதாவில் சேர்க்கப்பட வேண்டும். மேலும் புகார் அளிக்க ஒரு குழு மட்டுமே இருக்க வேண்டும்" என்று வலியுறுத்தியது,
பாஜக எம்எல்ஏ காளிசரண் சரஃப் கூறுகையில், "நோயாளி கண் மருத்துவமனைக்கு வந்தால், அவருக்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படும்? எனவே 50 படுக்கைகள் கொண்ட மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளை மட்டுமே சட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம் என்றார்.
சரஃப் மற்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ராஜேந்திர ரத்தோர் கூறுகையில், இருவரும் முந்தைய அரசாங்கத்தில் சுகாதாரதத் துறை இலாகாவில் பொறுப்பு வகித்தவர் மற்றும் மசோதாவுக்கான தேர்வுக் குழுவில் உறுப்பினராக இருந்தனர். இந்த 2 கோரிக்கைகளையும் சட்டத்தில் இணைக்க வேண்டும்" என்று கோரினர்.
ராஷ்டிரிய லோக்தந்திரிக் எம்.எல்.ஏ நாராயண் பெனிவால், போராட்டம் நடத்தும் மருத்துவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வழி காண வேண்டும் என்றார்.
சி.பி.எம் எம்.எல்.ஏ கிர்தாரிலால் கூறுகையில், இது ஒரு வரலாற்று செயல் என்று கூறினார். கோவிட் சமயத்தில் தங்கள் தனியார் மருத்துவமனைகளை மூடிய மருத்துவர்கள் மட்டுமே போராட்டம் நடத்துகிறார்கள். நான் மருத்துவர்களுக்கு எதிரானவன் அல்ல, ஆனால் தனியார் மருத்துவமனை எதிர்த்தால் அது தவறு என்று கூறினார்.
விவாதத்திற்கு பதிலளித்த மாநில சுகாதார அமைச்சர் பர்சாதி லால், தேர்வுக் குழுவின் முடிவுகளில் நாங்கள் தலையிடவில்லை. நீங்கள் எங்களிடம் கேட்டதை மட்டுமே நாங்கள் செய்துள்ளோம். நாங்களும் மருத்துவர்களின் ஆட்சேபனைகளைக் கேட்டு, அவற்றைத் தீர்க்க ஒப்புக்கொண்டோம். இந்த மசோதா முந்தைய வெர்ஷனில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என்றார்.
தொடர்ந்து சட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட விதிகளில் 50 படுக்கைகள் வசதி சேர்க்கப்படும் என்றார். மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்ற மருத்துவர்களின் கோரிக்கை குறித்து அவர் கூறியதாவது, இது நியாயமானது அல்ல. இது சட்டப்பேரவை செயல்முறையை அவமதிக்கும் செயலாகும். ஜனநாயகத்தில் இது நடக்காது என்றார்.
நாம் அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்கள் மீது அக்கறை காட்ட வேண்டும். இந்த மசோதா மாநில நலன் சார்ந்தது '' என்றும் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.