ராஜஸ்தான் இடைத்தேர்தலில் பாஜக பெற்றிருக்கும் தோல்வி, அந்தக் கட்சிக்கு ஒரு எச்சரிக்கை! இந்த ஆண்டு இறுதியில் தேர்தலை சந்திக்க இருக்கும் மாநிலம் அது என்பது முக்கியம்!
ராஜஸ்தான் மாநில இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று (பிப்ரவரி 1) வெளியானது. நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து கொண்டிருந்த வேளையில், இந்தத் தேர்தலின் முன்னணி நிலவரங்கள் வெளியாக ஆரம்பித்தனர். பட்ஜெட் உரையை ஆஹா... ஓஹோ... என புகழ்ந்து கொண்டிருந்த பாஜக அபிமானிகளுக்கு ராஜஸ்தான் ரிசல்ட் இடியாக இறங்க ஆரம்பித்தது.
ராஜஸ்தானில் அல்வார், அஜ்மீர் ஆகிய இரு லோக்சபா தொகுதிகளுக்கும், மண்டல்கார் சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. நேற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், இந்த 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
ராஜஸ்தானில் வசுந்தர ராஜே தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், ஆளும்கட்சியான பாஜக மொத்தமாக இடைத்தேர்தலில் ‘கோட்டை’ விட்டிருப்பது அந்தக் கட்சி மேலிடத்தை அதிர வைத்திருக்கிறது.
இரு லோக்சபா தொகுதிகளிலும் தலா 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. மண்டல்கார் சட்டமன்றத் தொகுதியையும் சேர்த்தால், 17 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடந்ததாக எடுத்துக் கொள்ளலாம். இது ராஜஸ்தானின் மொத்தத் தொகுதிகளின் (200) எண்ணிக்கையில் 8.5 சதவிகிதம்!
தேர்தல் நடந்த அல்வார், ஹரியானா மாநில எல்லையை ஒட்டி அமைந்திருக்கிறது. அஜ்மீர், மத்திய ராஜஸ்தானில் இருக்கிறது. மண்டல்கார், மத்தியபிரதேச மாநில எல்லையை ஒட்டி உள்ளது. இப்படி மாநிலத்தின் வெவ்வேறு மூலைகளில் உள்ள தொகுதிகளின் ரிசல்ட், ஒரே மாதிரி காங்கிரஸுக்கு ஆதரவாக வந்திருப்பதை கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கிறது.
ராஜஸ்தானின் ஒட்டுமொத்த மனநிலையாகவே இதை அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஏதோ குறிப்பிட்ட ஏரியாவில் குறிப்பிட்ட காரணத்தால் பாஜக தோற்றுவிட்டதாக கூற முடியவில்லை. விவசாயிகள் போராட்டம், குஜ்ஜார் இட ஒதுக்கீடு மசோதாக்களை நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கும் விவகாரம், அரசு ஊழியர்கள் மீதான விசாரணைக்கு தடை விதிக்கும் அவசர சட்டம், பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் நிகழ்ந்த வன்முறைகள், சமீபத்தில் வெடித்த ‘பத்மாவத்’ திரைப்பட சர்ச்சை ஆகியன பாஜக.வுக்கு எதிரான மனநிலையை உருவாக்கியதாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வரவிருக்கும் சூழலில், வலிமையான தலைவராக கருதப்பட்ட மாநில முதல்வர் வசுந்தர ராஜேவுக்கு இது பெரும் அதிர்ச்சி! அரசியல் ரீதியாக பின்னடைவும்கூட! இடைத்தேர்தல் வேட்பாளர்களை முழுக்க வசுந்தர ராஜேவே தேர்வு செய்தார். பிரசாரத்திலும்கூட தேசியத் தலைமை பெரிதாக தலையிட வில்லை. எனவே தோல்வியின் முழுச் சுமையும் வசுந்தர ராஜேவை அழுத்துகிறது.
எனினும் வசுந்தர ராஜேவுக்கு தேசியத் தலைமையின் ஒத்துழைப்பு தொடரும் என்பதே இப்போதைய நிலைமை! இந்தத் தோல்வியை ஒரு அபாய எச்சரிக்கையாக கட்சி எடுத்துக் கொள்ளும் என்கிறார்கள், பாஜக வட்டாரத்தில்! ராஜஸ்தானில் பாஜக.வுக்கு கணிசமாக வாக்களிக்கு வணிகர்கள் இந்த முறை ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக எதிராக திரும்பியதும் இந்தத் தோல்விக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
அது நிஜமானால், இந்தியா முழுக்க பாஜக.வுக்கு எதிராக அலையின் தொடக்கமாக ராஜஸ்தான் தோல்வி அமையலாம். பாஜக இதை எப்படி எதிர்கொள்கிறது? இந்தச் சரிவை சரிசெய்ய என்ன செய்யப் போகிறது? என்பதைப் பொறுத்தே எதிர்கால காட்சிகள் இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.