இந்த முடிவு ஒரு முன்கூட்டியே எடுக்கப்பட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளும்கட்சியான காங்கிரஸில் நிலவும் குழப்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து முயற்சிப்பதாக மாநில காங்கிரஸ் தலைவராகவும் துணை முதல்வராகவும் இருந்த சச்சின் பைலட்டின் பதவி பறிக்கப்பட்டது. அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் அமைச்சர் மற்றும் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன.
Advertisment
அவர்களை தகுதி நீக்கம் செய்யவும் நடவடிக்கைகளை ஆளும்கட்சிகள் மேற்கொண்டன. ஆனால், இதனை எதிர்த்து சச்சின் பைலட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை வரை சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தடை விதித்து உத்தரவிட்டது.
இதனிடையே, ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக அதிருப்தி எம்எல்ஏ பன்வார்லால் சர்மா என்பவருடன் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தொலைபேசியில் பேசியதாக ஆடியோ டேப் ஒன்றை காங்கிரஸ் வெளியிட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு போலீஸ் நடவடிக்கை குழுவுக்கு முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஆட்சியைக் கவிழ்க்க அதிருப்தி எம்எல்ஏவுடன் பேரம் பேசியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மத்திய அமைச்சர் ஷெகாவத்துக்கு ராஜஸ்தான் போலீஸார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இதுகுறித்து அமைச்சர் ஷெகாவத் கூறும்போது, "ராஜஸ்தானில் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. முதலில் அந்தஆடியோ எங்கிருந்து வெளியானது என போலீஸார் விசாரிக்க வேண்டும். அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய வேண்டும். அரசே தொலைபேசி ஒட்டுக்கேட்டு உரையாடலை பதிவு செய்ததா என்பதையும் போலீஸார் கண்டுபிடிக்க வேண்டும்" என்றார்.
இதனையடுத்து பன்வர் லால் சர்மாவைத் தேடி சச்சின் பைல்ட் உள்ளிட்ட 19 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியிருந்த மானேசர் பகுதி ஹோட்டலுக்கு ராஜஸ்தான் மாநில காவல்துறை அதிகாரிகள் சென்றனர். ஆனால், அவர்கள் அந்த ஹோட்டலில் இல்லாததை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்போது, அவர்கள் அனைவரும் எங்கிருக்கிறார்கள் என்ற விஷயம் மர்மமாக இருந்து வருகிறது. அவர்கள் ஹோட்டலில் இருந்து தப்பி கர்நாடகாவுக்கு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சச்சின் பைலட் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இதனை மறுக்கவும் செய்துள்ளார்.
இதற்கிடையே, சச்சின் பைலட் உள்பட 19 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு ராஜஸ்தான் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கு இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது.
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சார்பாக ஆஜரான முகுல் ரோஹத்கி, சச்சின் பைலட் மற்றும் பிறரை இரண்டு கூட்டங்களைத் தவிர்த்த பின்னர் தகுதி நீக்கம் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பும் போது சபாநாயகர் அவசர கதி காட்டியதாகவும், காட்டியதாகவும் எந்த காரணமும் தெரிவிக்கவில்லை என்றும் வாதாடினார்.
"கொரோனா நோய்த் தொற்றுக்கு நடுவில், நோட்டீஸுக்கு பதிலளிக்க எம்.எல்.ஏ.க்களுக்கு மூன்று நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது. இந்த முடிவு முன்கூட்டியே எடுக்கப்பட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று ரோஹத்கி வாதிட்டார்.
இந்நிலையில், வரும் 24ம் தேதி வரை சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என சபாநாயகருக்கு ராஜஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபாநாயகர் ஜோஷி கூறுகையில், உயர்நீதிமன்றத்தில் விசாரணை முடிந்துவிட்டது. வரும் 24ம் தேதியன்று உத்தரவு பிறப்பிக்கப்படும். சபாநாயகர் விசாரணை நடத்தவும் அதுவரை தடை விதித்துள்ளது எனக்கூறினார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”