ராஜஸ்தானில் கட்டுக்கட்டாக லஞ்சம் வாங்கிய பணத்தை, வட்டிக்கு விற்று சம்பாதித்த ஐஆர்எஸ் அதிகாரி கையும் களவுமாக ஊழல் தடுப்புத்துறையினரிடம் பிடிப்பட்டார்.
இராஜஸ்தானில் மாவட்டப் போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரியாகப் பணியாற்றிய சுப்பிரமணியம் என்பவர்,
இந்திய வருவாய்ப் பணி அதிகாரியான சாகி ராம் மீனா பணியில் தனக்கு அதிகம் நெருக்கடி தருவதாக குற்றம்சாட்டினார். இந்த காரணத்தினால் தான் பதவி விலகுவதாகவும் கடிதம் எழுதினார்.
இதன் பின்பு, சாகி ராம் மீனாவை லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர்ந்து கண்காணிக்க தொடங்கினர். இதன் விளைவாக சாகி ராம் மீனா 1 லட்சம் ரூபார் லஞ்சமாக வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
மேலும், கடந்த சனிக்கிழமை மீனாவின் சங்கர் விஹார் பங்களாவில் காவல்துறையினரின் உதவியுடன் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர். இதில் சாகி ராம் மீனாவுக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள், கோடிக்கணக்கான பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கூடவே, ஏராளமான சொத்துக்களுக்கான ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதிரடி சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் விவரங்களும் வெளியாகின. பணமாக ரூ.2,26,00,098, நகையின் மதிப்பு ரூ.6 லட்சம், ஒரு குடியிருப்பு, ஒரு பெட்ரோல் பங்க், 25 கடைகள் மற்றும் 82 துண்டு நிலங்கள், ஜெய்ப்பூர் நகரில் ஒரு நட்சத்திர விடுதி ஆகியவையாகும்.
ஐஆர்எஸ் அதிகாரி சாஹி ராம் மீனா சமீபத்தில்தான் ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தின் போதைத் தடுப்புப் பிரிவின் துணை ஆணையராக நியமிக்கப்பட்டார்.அதிரடி சோதனையில் கணக்கிலடங்கா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்பு அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணை அதிர்ச்சியளிக்கும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. சாகி ராம் மீனா தன்னிடம் வரும் அதிகாரிகள், பொதுமக்கள், தொழிலதிபர்கள் என அனைவரிடம் கட்டுக்கட்டாக லஞ்சம் பெற்றுள்ளார்.
அந்த லஞ்ச பணத்தை வட்டிக்கு விட்டும் சம்பாதித்திருக்கிறார். இப்படியே அவருக்கு கோடிக்கணக்கில் சொத்து சேர்ந்திருக்கிறது. அத்துடன் சாகி ராம் மீனா வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பி பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சித் தலைவர்களுக்குமே கடிதம் எழுதியிருப்பதும் தெரியவந்துள்ளது.
phd முடித்துள்ள சாகி ராம் மீனா, சமீபத்தில் வரிச் சீரமைப்புக் குறித்து ஒரு நூல் எழுதியிருப்பதும் குறிப்பிடத் தக்கது.