மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியது. அதனால், மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் 12 ஆம் வகுப்பு முடித்த கையுடன் நீட் நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களில் பயின்று தேர்வுகளை எழுதி வருகிறார்கள். அதேநேரத்தில், நீட் நுழைவுத் தேர்வில் தோல்வி காரணமாகவும், அதிக மதிப்பெண் எடுத்ததும் மருத்துவம் படிக்க சேர முடியவில்லை என்கிற விரக்தியில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதனால் அவர்களின் கனவோடு பெற்றோரின் கனவும் சிதைந்து விடுகிறது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் நுழைவுத் தேர்வு பயிற்சி மையத்தில் பயின்று வந்த 2 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். அதுவும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் 2 மாணவர்கள் நீட்-க்கு பலியான இந்த துயர சம்பவம் மாநிலத்தையே உலுக்கியுள்ளது.
உயிரிழந்த 2 மாணவர்களில் 17 வயதான மாணவர் மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த மூன்று ஆண்டுகளாக நகரத்தில் தனது தாத்தா பாட்டியுடன் தங்கியிருந்து பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார். அவர் பயிற்சி நிறுவனத்தின் 6வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தனது சகோதரி மற்றும் உறவினருடன் வசித்து வந்த பீகாரைச் சேர்ந்த 18 வயதான மற்றொரு மாணவர் நேற்று மாலையில், விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். "கோட்டாவில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். அவர் நீட் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்தார், ”என்று கோட்டாவின் குனாடி காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறினார். ஒரே நாளில் 2 மாணவர்கள் நீட்-க்கு பலியாகிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
23 பேர் மரணம் - அதிர்ச்சி தகவல்
ராஜஸ்தானில் நேற்று 2 மாணவர்கள் நீட் தேர்வால் உயிரிழந்த நிலையில், நீட் தேர்வு பயிற்சி மையத்தில் இதேபோல் இந்த ஆண்டு உயிழந்த மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை 23 ஆக உள்ளது. இது கடந்த எட்டு ஆண்டுகளில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கையை விட மிக அதிகமாகும்.
கோட்டா காவல்துறையின் தரவுகளின்படி, நீட் தேர்வால் 2015 ஆம் ஆண்டில் 17 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதன் பின்னர் 2016ல் 16 மாணவர்களும், 2017ல் 7 பேரும், 2018ல் 20 பேரும் மற்றும் 2019ல் 8 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2020 மற்றும் 2021 ம் ஆண்டுகளில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்கொலைகள் குறைந்து காணப்பட்டன. அதன்படி, 2020ல் 4 மாணவர்களும், 2021ல் யாரும் தற்கொலை செய்யவில்லை.
இந்த ஆண்டில் லாக்-டவுன் அமலில் இருந்த நிலையில், மாணவர்கள் நகரத்தை விட்டு வெளியேறினர். ஆனால், 2022ல் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் எண்ணிக்கை மீண்டும் 15 ஆக இருந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள், மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை கடந்த ஆண்டு எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் இறப்புகளைத் தடுக்கும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி வந்தாலும், அவ்வப்போது உயிழப்புகள் நடந்து வருகிறது.
இந்த மாத தொடக்கத்தில், மாணவர்கள் தூக்கில் தொங்குவதைத் தடுக்க, விடுதிகளில் ஸ்பிரிங் பொருத்தப்பட்ட மின்விசிறிகளை நிறுவுவதை நிர்வாகம் கட்டாயமாக்கியுள்ளது. மாணவர்களைக் கண்காணிக்க பயிற்சி மையங்களில் கவுன்சிலிங் மற்றும் பயோமெட்ரிக் வருகை போன்ற நடவடிக்கைகளையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil