'நான் அரசியலுக்கு வருவது உறுதி' என்று ரஜினி அறிவித்து ஒரு வருடம் ஆகப் போகிறது. ஆனால், இன்னும் அவர் கட்சி தொடங்கவில்லை. விரைவில் அதற்கான விடைகள் தெரியவரும் என்கிற சூழலில், சினிமா குறித்தும் அரசியல் குறித்தும் இந்தியா டுடேவுக்கு அவர் அளித்துள்ள பேட்டியின் சுருக்கம் இதோ,
"எனக்கு காமெடி செய்வது என்றால் அவ்வளவு பிடிக்கும். ஷூட்டிங் செல்லும் போது கூட, அன்றைய தினம் காமெடி காட்சிகள் மட்டும் தான் என்று கூறினால் குஷியாகிவிடுவேன். ஏனெனில், ஒருவரை சிரிக்க வைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று.
நான் பெங்களூருவில் பஸ் கண்டக்டராக இருந்த காலத்தில், கர்நாடக போக்குவரத்துக் கழகம் சார்பில் ஒவ்வொரு வருடமும் மேடை அமைத்து நாடகங்கள் நடத்தப்படும். அதில் நான் எப்போதும் விரும்புவது துரியோதனன் கேரக்டர் தான். ஏனெனில், நான் NTRன் ரசிகனாக இருந்தேன். அப்போது, எனது சக ஊழியரும் நண்பருமான ராஜ் பகதூர் தான், 'நீ இங்கிருக்க வேண்டிய ஆள் இல்லை. நீ உடனே சென்னைக்கு சென்று ஃபில்ம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து நடிப்பு பயிற்சி எடு என்று என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தான். எனது அண்ணனும் எனக்கு நிதியுதவி செய்தார்.
பின்னர், சென்னைக்கு வந்து நடிப்பு படித்து, பாலச்சந்தர் சார் கண்ணில் பட்டு, இன்று உங்கள் முன்னால் நிற்பது எல்லாம் வரலாறு.
பாட்ஷா, அலெக்ஸ்பாண்டியன், ஸ்ரீ ராகவேந்தர் ஆகிய இந்த மூன்று பாத்திரங்களும், ஒரு நடிகனாக ஏதோ செய்திருக்கிறேன் என்று என்னால் சொல்ல முடியும்.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கெல்லாம் எம்.ஜி.ஆர் தான் ரோல் மாடல். அவருடைய உதவும் குணத்தை கண்டு நான் வியந்திருக்கிறேன். அது எனக்கு ஒரு பாடமும் கூட.
என்னதான் சொன்னாலும், ஜெயலலிதா ஒரு சிறந்த பெண்மணி. அவருடைய துணிச்சலை நாம் பாராட்டியே ஆக வேண்டும். இவ்வளவு ஆண்கள் நிறைந்த உலகத்தில், ஒரு தனி பெண்மணியாக நின்று சாதித்துவிட்டு சென்றிருக்கிறார்.
அரசியலில் எனக்கு கமல்ஹாசன் போட்டியாளரே அல்ல. நான் யாரையுமே அப்படி நினைப்பதில்லை. கமல்ஹாசனும் இன்னமும் எனக்கு நெருங்கிய நண்பர் தான்.
அரசியல் என்பது மிக மிக கடினமான ஒன்று. அது மிகவும் ஆபத்தான விளையாட்டும் கூட. அதனால் தான் அதனை கவனமாக நான் விளையாடுகிறேன். டைமிங் என்பதும் இங்கு முக்கியமான அம்சமாகும்.
கடுமையான சட்டங்களை அமல்படுத்துவதன் மூலமே ஊழலை ஒழிக்க முடியும். பயம் மட்டுமே ஒரே ஆயுதம். பயத்தை கொண்டு தான் நாம் தவறுகளை ஒழிக்க முடியும். வேறு ஒன்றும் வேலைக்கு ஆகாது" என்று அதிரடியாக தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.