/tamil-ie/media/media_files/uploads/2019/06/z865.jpg)
Rajinikanth sticker on auto rickshaw helps find murderer - ஆட்டோவில் ஒட்டப்பட்டிருந்த ரஜினிகாந்த் போஸ்டரால் சிக்கிய கொலையாளி!
ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆட்டோவில் இருந்த ரஜினிகாந்த் போஸ்டர் மூலம், கொலை வழக்கில் குற்றவாளியை போலீஸ் கண்டுபிடித்து கைது செய்துள்ளது.
போண்டிலி நிர்மலா பாய்(45) என்பவர் நெல்லூரில் உள்ள ராமலிங்கபுரத்தில் வசித்து வந்தார். அருகில் இருந்த தனியார் பள்ளி ஒன்றில் கிளார்க்-ஆக பணியாற்றி வந்தார். இவரது கணவர் ரமேஷ் சிங் மூன்று வருடத்திற்கு முன்பே இறந்துவிட்டார்.
நிர்மலா பாய் மகன் பெங்களூருவில் பணி செய்து வர, மகள் திருப்பதியில் படித்து வந்தார். இதனால், நெல்லூரில் நிர்மலா பாய் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், நிர்மலா பாய் கடந்த மே 28ம் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்க, அருகில் இருந்த வீட்டின் சிசிடிவி கேமரா உதவியுடன் போலீசார் ஆய்வு செய்கையில், நிர்மலா பாய் வீட்டிற்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஆட்டோ வந்து சென்றதை கண்டறிந்தனர். அந்த ஆட்டோவின் பின்புறம் ரஜினிகாந்தின் புகைப்படம் இருந்தது மட்டுமே, போலீஸுக்கு கிடைத்த ஒரே தடயம்.
அதை வைத்து கிட்டத்தட்ட 10,000 ஆட்டோக்கள் வரை தேடியும் போலீசாரால் கொலையாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், நேற்று (ஜூன்.3) ரஜினியின் அதே போஸ்டர் கொண்ட ஆட்டோவை நெல்லூர் நகர அப்போலோ மருத்துவமனை அருகே போலீசார் கண்டறிய, அதன் டிரைவரை அப்படியே தூக்கி வந்து ட்ரீட்மென்ட் கொடுத்து விசாரிக்க, நிர்மலா பாயை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
22 வயதான ராமசாமி என்கிற வேமசனி ஸ்ரீகாந்த் என்கிற ரஜினிகாந்த் தான் அந்த ஆட்டோ டிரைவர்.
வீட்டில் நிர்மலா பாய் தனியாக இருப்பதை நோட்டமிட்டு, அவர் அணிந்திருந்த நகைகளை திருட சென்றிருக்கிறார். பட்டன் கத்தி மூலம், நிர்மலா பாய் கழுத்தில் 10 முறை குத்திக் கொன்றுவிட்டு, சிலிண்டரை ஆன் செய்து, கொலையை சிலிண்டர் விபத்தாக சித்தரித்து அங்கிருந்து தப்பித்து சென்றிருக்கிறார்.
இப்போது, அவரது ஆட்டோவில் ஒட்டியிருந்த ரஜினியின் போஸ்டரால் வசமாக சிக்கியிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.