முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் எம்.பி ரவிக்குமாருடன் சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேர் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தனது மகன் நிரபராதி என்றும் இருப்பினும் நீதிமன்ற தீர்ப்புபடி இத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ளனர். அதனால், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று போராடி வருகிறார். இந்நிலையில், உச்ச நீதிமன்றம் அவர்களை தமிழக அரசே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என்று அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, பேரறிவாளன், உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. உச்ச நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் தமிழ ஆளுநர் உத்தரவிடலாம் என்று கூறியது. ஆனால், இதுநாள்வரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அந்த தீர்மானத்தின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இதனால், 7 பேரின் விடுதலை என்பது கிடப்பில் உள்ளது.
இதையடுத்து, அற்புதம்மாள் 7 பேரின் விடுதலை தீர்மாணத்தின் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் ஆதரவைத் திரட்ட மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆளுநரை சந்தித்து முறையிடவும் முயற்சி செய்தார். கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பாக அவர்கள் விடுதலை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கான அறிகுறிகளே தென்படாமல் போனது.
இந்நிலையில், பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்.பியுமான திருமாவளவன் மற்றும் அக்கட்சியின் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமாருடன் சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்து பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர்களை விடுதலை செய்யக் கோரி கோரிக்கை மனு அளித்தார்.
இது தொடர்பாக திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில், “பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்யக் கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வலியுறுத்தினேன். உடன் ரவிக்குமார் எம்.பி மற்றும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்” உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.