ராஜீவ் கொலைக் கைதிகள் 7 பேர் விடுதலையா? 3 மாதங்களில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு உத்தரவு

ராஜீவ் காந்தி கொலைக் கைதிகள் 7 பேரை விடுவிப்பது குறித்து 3 மாதங்களில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

ராஜீவ் காந்தி கொலைக் கைதிகள் 7 பேரை விடுவிப்பது குறித்து 3 மாதங்களில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகியோர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார்கள். இவர்களை விடுவிக்க நீண்ட சட்டப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ராஜீவ் காந்தி கொலைக் கைதிகளில் ஒருவரான பேரறிவாளன் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், ‘ராஜீவ் கொலை நிகழ்வுக்கு வெடிகுண்டு தயாரிக்க பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக என் மீது குற்றச்சாட்டு. ஆனால் அந்த பேட்டரியை எதற்காக கேட்டார்கள் என எனக்குத் தெரியாது என நான் கூறியதை வாக்குமூலத்தில் பதிவு செய்யவில்லை என போலீஸ் அதிகாரி தியாகராஜன் கூறியிருக்கிறார்.

ராஜீவ் கொலைவழக்கில் நான் சதி செய்ததாக கூறப்பட்ட புகார் இதன் மூலமாக பொய்யாகிறது. எனவே என்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க உத்தரவிட வேண்டும்.
மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) ஓய்வு பெற்ற அதிகாரி தியாகராஜன் இது தொடர்பாக பிராமாண பத்திரம் தாக்கல் செய்திருக்கிறார். விசாரணை அதிகாரியாக இருந்தபோது, இதனை பற்றி விளக்கமாக நீதிமன்றத்திடம் நான் தெரிவிக்கவில்லை என்று தியாகராஜன் பிரமாணப் பத்திரத்தில் கூறியிருக்கிறார்.

தியாகராஜன் வழங்கிய பிரமாண பத்திரம் மிக முக்கியமான ஆவணம். இதனால் என்னுடைய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். எனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்” என்று பேரறிவாளன் மனு செய்திருந்தார். இந்த கோரிக்கை தொடர்பாக மத்தியப் புலனாய்வு துறை பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மத்திய புலனாய்வு துறைக்குப் பதிலாக மத்திய அரசு ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது.
‘இந்த சதித்திட்டத்தில் யார் யாருக்கு தொடர்பு என்பது பற்றி விசாரிக்க குழு ஒன்று அமைத்திருந்தோம். இந்த விசாரணை முடிவு எதுவும் இல்லாமல் நீண்டு கொண்டே சென்றதால், மேற்கொண்டு விசாரிக்கவில்லை.’ என்று இந்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஈடுபட்டோருக்கு எந்தவித கருணையும் அளிக்கக்கூடாது என அரசியல் சாசன அமர்வு தெளிவாக சொல்லியிருக்கிறது. மேலும், தமிழக அரசுக்கு இவர்களின் தண்டனை காலத்தை குறைப்பதற்கு அதிகாரம் உள்ளதா என்பதை முடிவு செய்ய 3 நிதிபதிகள் குழு விசாரிக்கிறது. 3 நீதிபதிகள் குழு விசாரணை நிலுவையில் இருக்கிறபோது, இவரை விடுதலை செய்வதற்கு எந்தவொரு அனுமதியும் அளிக்கக்கூடாது. நீதிமன்றம் இந்த மனுவை நிராகரிக்க வேண்டும்’ என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது இது தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி, ‘இது மேலெழுந்தவாரியான ஒரு வாதமாக இருக்கிறது. ஆனால், சிபிஐ அதிகாரி தியாகராஜனின் பிரமாணப் பத்திரத்திற்கு நீங்கள் சரியாக பதில் சொல்லவில்லை. தியாகராஜன் அளித்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றதா இல்லையா? சதித் திட்டத்தில் பேரறிவாளனுக்கு பங்கு இருக்கிறதா இல்லையா? என்பதை நீங்கள் தெளிவாக சொல்லவில்லை. எனவே, இது பற்றிய விளக்கத்தை பிரமாணப் பத்திரமாக இல்லாமல், பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும். சிபிஐயும், மத்திய அரசும் இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தார்.

சிபிஐ தரப்பில், மூடிய உறையில் வைத்து தங்களுடைய அறிக்கையை அளித்தனர். எனவே, அந்த அறிக்கையின் நகலை வழங்க வேண்டும் என்று பேரறிவாளன் தரப்பு வேண்டுகோள் வைத்தது. ஆனால், ‘அந்த அறிக்கை நகலை வழங்க முடியாது. நீதிமன்றத்திலேயே அந்த அறிக்கை தகவல்களை கேட்டுக்கொண்டு விவாதிக்கலாம்’ என நீதிமன்றம் கூறிவிட்டது. அதன்படி நீதிமன்றத்திலேயே மூடிய உறையில் இருந்த அறிக்கையை வாசித்தனர்.

‘இந்த வழக்கில் மேற்கொண்டு விசாரணை தேவையில்லை. இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்’ என்கிற நிலைப்பாட்டை சிபிஐ அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆனால், அதனை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. ‘சிபிஐ அதிகாரி தியாகராஜனின் பிரமாணப் பத்திரத்திற்கு உட்பட்டு உங்களுடைய பதில் மனு அமைய வேண்டும். இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணையை ஜனவரி 23-ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

உச்சநீதிமன்றத்தின் இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘ராஜீவ் கொலைக் கைதிகளான பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக 3 மாதங்களில் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்’ என நீதிபதிகள் பிறப்பித்தனர்.

இந்த உத்தரவு குறித்து ராஜீவ் கொலைக் கைதிகளுக்காக பல்வேறு வழக்குகளில் வாதாடியவரான மூத்த வழக்கறிஞர் துரைசாமி கூறுகையில், ‘என்னைப் பொறுத்தவரை, அவர்கள் குற்றம் செய்யாதவர்கள். ஆனால் மத்திய அரசு ஏற்கனவே எடுத்த நிலைப்பாட்டில் இருந்து மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. காரணம், மரணம் அடைந்தது காங்கிரஸ் தலைவர்! எனவே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க மத்திய அரசு முடிவெடுத்தால், அரசியல் ரீதியான விமர்சனங்கள் வரும் என அவர்கள் நினைக்கலாம். நீதிமன்றத்தில்தான் இதற்கு தீர்வு ஏற்பட வேண்டும்’ என்றார் அவர்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close