நாங்கள் இப்போதுதான் வடக்கே நடக்க ஆரம்பித்துள்ளோம், பிப்ரவரி 22, 1994 அன்று இந்தியப் பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றி, எஞ்சிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளான கில்ஜித் மற்றும் பலுசிஸ்தானை அடையும்போது நமது பயணம் முழுமையடையும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வியாழனன்று கூறினார்.
பாகிஸ்தான் தாக்குதல்களில் ஜம்மு காஷ்மீரைப் பாதுகாக்க, இந்திய ராணுவம் புட்காம் விமானநிலையத்தில் தரையிறங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் ஷௌர்யா திவாஸ் கொண்டாட்டத்தில் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள சில பகுதிகள் இன்னும் உரிமை இல்லாமல் இருப்பதாக கூறினார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிப்பவர்கள் அப்பாவி இந்தியர்கள், அங்கு நடக்கும் அட்டூழியங்களுக்கு பாகிஸ்தானே முழு பொறுப்பு என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
வரவிருக்கும் காலங்களில், பாகிஸ்தான் பலமான தாக்குதலை எதிர்கொள்ளும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் மக்களின் வலியை நாங்கள் உணர்கிறோம். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் வளர்ச்சிப் பாதையில் சென்று புதிய உயரங்களைத் தொடுகின்றன. இது வெறும் ஆரம்பம் தான்.
1947 ஆம் ஆண்டு அகதிகளுக்கு நீதி கிடைத்து, அவர்களின் மூதாதையரின் நிலம் அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்படும் போது, சர்தார் வல்லபாய் படேலின் தேசிய ஒற்றுமை கனவு நனவாகும்.
சியாமா பிரசாத் முகர்ஜியால் தொடங்கப்பட்ட முழு ஒருங்கிணைப்பின் நோக்கம் ஆகஸ்ட் 5, 2019 அன்று பிரதமர் மோடியின் தலைமையில் 370வது பிரிவு நீக்கப்பட்டபோது அதன் முடிவை எட்டியது.

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தாலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் பல தசாப்தங்களாக வளர்ச்சி மற்றும் அமைதியை இழந்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு ‘சிறப்பு அந்தஸ்து’ வழங்கப்பட்டது, ஆனால் சிறப்பு என்பதற்கு அப்பால், அதன் அடிப்படை உரிமைகள் கூட பறிக்கப்பட்டது.
முன்னதாக, இந்தியாவுக்கு எதிரான சில சக்திகள் மதத்தின் பெயரால் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைத்தனர், ஆனால் இப்போது அரசு மற்றும் ஆயுதப்படைகளின் தொடர்ச்சியான முயற்சிகளால் ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவுகிறது.
காஷ்மீரியத் என்ற பெயரில் ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத்தின் தாண்டவத்தை கண்டது. இதன் காரணமாக, எண்ணற்ற உயிர்கள் பலியாகியுள்ளன, எண்ணற்ற வீடுகள் அழிந்துள்ளன. மதத்தின் பெயரால் எவ்வளவு ரத்தம் சிந்தப்பட்டது என்பதற்கு அளவே இல்லை.
பலர் பயங்கரவாதத்தை ஒரு மதத்துடன் இணைக்க முயன்றனர், ஆனால் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு மதத்தில் மட்டும்தான் இருந்தார்களா?
பள்ளத்தாக்கிலிருந்து காஷ்மீரி பண்டிட்டுகளின் வெளியேற்றம் துயரமானது. ஒரு சமூகத்தின் அறிவுஜீவிகள் அநீதிக்கு எதிராக அமைதியாக இருக்கும் போது, அந்த சமூகத்தின் வீழ்ச்சிக்கு அதிக நேரம் எடுக்காது என்று ராஜ்நாத் சிங் பேசினார்.
முன்னதாக ராஜ்நாத் சிங் தனது உரையில், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைக் காக்க தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த ஆயுதப் படைகளின் மாவீரர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அவர்களின் வீரம் மற்றும் தியாகத்தால் தான் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக நிலைத்து நிற்கும் என்றும் அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“