இந்திய எல்லைப்பகுதியில் சீனா அத்துமீறல், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் ரஷ்ய பயணம் நடந்துள்ள நிலையில்,எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த புதிய ரக போர் விமானங்கள், 21 மிக்29 ரக விமானங்கள், 12 சு30எம்கி ஏவுகணைகள், ரூ.38,900 கோடி மதிப்பீட்டில் ராணுவ தளவாடங்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ராஜ்நாத் சிங், இன்று ( ஜூலை 3ம் தேதி) லடாக் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள இருந்த நிலையில், அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ராஜ்நாத் சிங் தலைமையில், நாட்டின் பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், எல்லைப்பகுதிகளில் தற்போதைய நிலை, எல்லைகளி பாதுகாப்பு பலப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது. பிரதமர் மோடி சமீபத்தில் ஆற்றிய சுயசார்பு இந்தியா குறித்த உரையிலும் நாட்டின் பாதுகாப்பு குறித்து முக்கியமாக குறிப்பிடப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.
ராஜ்நாத் சிங்கின் லடாக் பயணம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படாதநிலையில், புதிய தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜ்நாத் சிங், ராணுவ தளபதி நாராவணே, வடக்கு மண்டல கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் ஜோஷி உடன் லே மற்றும் லடாக் பகுதியில் ஆய்வு மற்றும் ராணுவ கமாண்டர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு கையகப்படுத்துதல் கூட்டம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின் விமானத்துறையை மேம்படுத்த வேண்டும் என்பது நீண்டநாளைய கோரிக்கை ஆகும். புதிய மிக் ரக போர்விமானங்கள் வாங்கவேண்டும் என்று நீண்டநாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது 21 புதிய மிக் 29 ரக போர்விமானங்கள் வாங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதேபோல், விமானத்துறையை மேம்படுத்தும் விதமாக, 59 மிக் 29 ரக விமானங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதுமட்டுமல்லாது புதிதாக 12 சு 30எம்கே போர்விமானங்கள் வாங்கப்பட உள்ளன.
புதிய மிக் 29 ரக விமானங்கள் ரஷ்யாவிடம் இருந்து வாங்க ரூ.7,418 கோடி மதிப்பீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ராஜ்நாத் சிங்கின் சமீபத்திய ரஷ்ய பயணத்தின்போது கையெழுத்து ஆகியுள்ளன.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ரூ.10,730 கோடி மதிப்பீட்டில் சு30எம்கேஐ போர்விமானங்கள் வாங்கப்பட உள்ளன.
ராணுவ தளவாடங்கள், போர்விமானங்கள் போன்றவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கைக்கிணங்க இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், நாட்டில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் வளர்ச்சி பெறும். உள்நாட்டிலேயே, போர் விமானங்கள் உள்ளிட்டவைகள் தயாரிக்கப்படுவதினால், அதன் தயாரிப்பு செலவு குறிப்பிட்ட சதவீதத்திற்கு மேல் சேமிப்பு ஆக வழிவகை ஏற்பட்டுள்ளது.
போர் விமானங்கள் தயாரிப்பு, பிற நாடுகளிடமிருந்து வாங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல், தொழில்நுட்ப அடிப்படையிலான பணிகளுக்கும் இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பினாகா அம்மியூனிசன்ஸ், பிஎம்பி ஆர்மனென்ட் அப்கிரேடு, ராணுவத்தில் மென்பொருள் ரேடியோ சேவை தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல், விமானப்படை மற்றும் கப்பற்படையில், அதிக தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளை சேர்த்தல் உள்ளிட்ட ரூ.20,400 கோடி மதிப்பிலான தயாரிப்பு மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
பினாகா வகை ஏவுகணைகள், இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், புதியதாக தயாரிக்கப்படும் மற்றும் வாங்கப்பட உள்ள அஸ்திரா வகை ஏவுகணைகள், கப்பற்படை மற்றும் விமாபனப்படையில் சேர்க்கப்பட உள்ளன. ஆர்சனல் மற்றும் போல்ஸ்டர் வகை ஏவுகணைகள், சமீபத்தில் தான் இவ்விரு படைகளிலும் இணைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய - சீன நாடுகளுக்கிடையே 3 முறை அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும், எல்லைப்பிரச்சினை விவகாரத்தில் இன்னும் தீர்வு எட்டப்படாததால், எல்லையில் பதட்டமான சூழ்நிலை தொடர்ந்து நிலவிவருகிறது. இந்த பேச்சுவார்த்தையில், இந்தியா தரப்பில் லெப்டினென்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் பங்கேற்றுள்ளார். இந்தியா பல்வேறு வழிகளில் தீர்வு காண முயன்றும், சீனா அமைதியை விரும்பாத நிலையிலேயே உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.