மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான ராம்விலாஸ் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 74.
மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் இன்று (அக்டோபர் 8) மாலை காலமானார். அவருக்கு வயது 74. ராம்விலாஸ் பாஸ்வானுக்கு கடந்தவாரம் ஒரு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, சில நாட்களிலேயே மீண்டும் மற்றொரு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் உடலில் பல்வேறு முக்கிய உறுப்புகள் பிரச்னைக்குள்ளானதால் அவரது உடல்நிலை சிக்கலாக இருந்தது.
பீகாரைச் சேர்ந்த தலித் தலைவரான ராம்விலாஸ் பாஸ்வான் நரேந்திர மோடி தலைமையிலான என்டிஏ அரசாங்கத்தில் மத்திய உணவு மற்றும் பொது விநியோக அமைச்சராக இருந்தார்.
மக்களவையில் 8 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ராம்விலாஸ் பாஸ்வான் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் சிறைக்குச் சென்றார். சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சியின் உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய அவர் 1969-இல் பீகார் சட்டமன்ற உறுப்பினராக ஆனார்.
பாஸ்வான் மக்களவைக்கு முதல் முறையாக 1977ம் ஆண்டில் ஜனதா கட்சி உறுப்பினராகவும், பீகாரில் உள்ள ஹாஜிபூர் தொகுதியில் இருந்து தொடர்ந்து 5 முறை எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000ம் ஆண்டில் லோக் ஜனசக்தி கட்சியை உருவாக்கி 2004ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் சேர்ந்தார்.
பாஸ்வான் ஐந்து பிரதமர்களின் கீழ் மத்திய அமைச்சராக பணியாற்றியுள்ளார். அவரது கட்சி அனைத்து தேசிய கூட்டணிகளிலும் உறுப்பினராக இருந்துள்ளது. இவர் பீகார் மாநிலத்தின் ககாரியா மாவட்டத்தில் உள்ள ஷாஹர்பானி கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது மகன் சிராக் பாஸ்வானும் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார்.