Newsmaker | Nothing historic about it: CPI(M) Politburo’s first Dalit member: சிபிஐ(எம்) இன் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான பொலிட்பீரோவின் முதல் தலித் உறுப்பினராக ராமச்சந்திர டோம், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கட்சி தொடங்கப்பட்டு 58 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு தலித் பொலிட்பீரோவின் உறுப்பினராகியுள்ளார். இருப்பினும், கட்சிக்கு இது ஒரு “வரலாற்று தருணம்” ஆக அமையவில்லை. மாணவர் அரசியலின் மூலம் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய 63 வயதான ராமச்சந்திர டோமின் கூற்றுப்படி, தலித் சமூகத்தைச் சேர்ந்த “பல உறுதியான தலைவர்கள்” கட்சியில் உள்ளனர்.
“எங்கள் கட்சியில், எந்த ஒரு நபரும் சில செயல்பாடுகள் மூலம் தலைவராகிறார். இது ஒரு தொடர்ச்சியான செயலாகும். எங்கள் கட்சியின் வரலாற்றில், தலித் சமூகத்தைச் சேர்ந்த பல தலைசிறந்த தலைவர்கள் இருந்தனர். எப்படியோ அவர்கள் பொலிட்பீரோவில் இடம்பெறவில்லை… எனவே, நான் பொலிட்பீரோவில் நுழைந்தது ஒரு வரலாற்றுத் தருணம் அல்ல,” என்று ராமச்சந்திர டோம் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.
பீர்பூம் மாவட்டத்தில் உள்ள சில்லா கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திர டோம். அவர் மரவேலை கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். தனது குழந்தைப் பருவத்திலிருந்தே நன்றாக படிக்கக்கூடிய மாணவரான ராமச்சந்திர டோம் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார் மற்றும் மதிப்புமிக்க என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்றார், அங்கிருந்து அவர் 1984 இல் எம்பிபிஎஸ் பட்டத்தை முடித்தார்.
1970 களின் நடுப்பகுதியில் அவசரநிலையின் போது, மாணவர் அரசியலில் ராமச்சந்திர டோம் தீவிரமாக ஈடுபட்டார் மற்றும் இடது முன்னணியின் மாணவர் பிரிவில் சேர்ந்தார்.
1989 ஆம் ஆண்டில், அவர் எம்பிபிஎஸ் முடித்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, பிர்பூம் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் நுழைந்தார். தொடர்ந்து ஆறு லோக்சபா தேர்தல்களில் வெற்றி பெற்று, 2014 வரை எம்.பி.யாக தொடர்ந்தார். 2014 பொதுத் தேர்தலில், போல்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அனுபம் ஹஸ்ராவிடம் தோல்வியடைந்தார்.
அவரது சக ஊழியர்களின் கூற்றுப்படி, ஆறு முறை எம்.பி.யாக இருந்த போதிலும், ராமச்சந்திர டோமின் வாழ்க்கை முறை மாறவில்லை. “சூரி பகுதியில் தனது பழைய சைக்கிளில் தொடர்ந்து வலம் வரும் ஒரே தலைவர் அவர் (ராமச்சந்திர டோம்) மட்டுமே. தொடர்ந்து ஆறு முறை எம்.பி ஆன பிறகும் தனது பழைய வாழ்க்கை முறையை கடைபிடிக்கும் அரிய தலைவர்களில் அவரும் ஒருவர்” என்று சிபிஐ(எம்) தலைவர் ஒருவர் கூறினார்.
இதையும் படியுங்கள்: கோவிலில் தடை; சிபிஎம் ஏற்பாடு செய்த இடத்தில் நிகழ்ச்சி நடத்தும் பரதநாட்டிய கலைஞர்
தொடர்ந்து மூன்றாவது முறையாக கட்சியின் பொதுச் செயலாளராக ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட சீதாராம் யெச்சூரி, பொலிட்பீரோவிற்கு ராமச்சந்திர டோமை வரவேற்றுப் பேசினார்: அப்போது, “சிபிஐ(எம்) வரலாற்றில், அவர் முதல் தலித் பொலிட்பீரோ உறுப்பினர் ஆவார். நாங்கள் அதை நினைத்து பெருமை கொள்கிறோம்” என்றார்.
இம்முறை பொலிட்பீரோவில் இருந்து விலக்கப்பட்ட மூத்த சிபிஐ(எம்) தலைவர் ஹன்னன் மொல்லா, ராமச்சந்திர டோமின் சேர்க்கை கட்சி மற்றும் “பொலிட்பீரோவில் சரியான தலித் பிரதிநிதித்துவம்” பெற்ற பெருமைக்குரிய தருணம் என்றும் கூறினார்.
“ராமச்சந்திர டோம் மேற்கு வங்கத்தில் ஒரு விளிம்புநிலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். வெகுஜன இயக்கம் மற்றும் வெகுஜன அமைப்பு மூலம் அவர் ஒரு தலைவராக ஆனார். கட்சித் தலைமையில் சரியான தலித் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளோம். அவர் பொலிட்பீரோவில் இடம் பெற்றிருப்பது எங்களைப் பெருமைப்படுத்தியுள்ளது” என்று ஹன்னன் மொல்லா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
இதற்கிடையில், கட்சி நாடு முழுவதும் அதன் இயக்கத்தை “கூர்மைப்படுத்த” வேண்டும் என்று ராமச்சந்திர டோம் கூறுகிறார். “நம் நாட்டில் ஒரு பாசிச ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மேற்கு வங்கத்திலும், மத்தியில் பாஜக மற்றும் மாநிலத்தில் TMC என நாம் இரண்டு பாசிச சக்திகளுக்கு எதிராகப் போராட வேண்டும். இந்த பாசிச ஆட்சியாளர்களுக்கு எதிராக நமது இயக்கத்தைக் கூர்மைப்படுத்த வேண்டும். நாங்கள் முழு நாட்டையும் சென்றடைய வேண்டும் மற்றும் எங்கள் கட்சி ஊழியர்களையும் எங்கள் செய்தியையும் நாட்டின் அனைத்து மூலைகளுக்கும் அனுப்ப வேண்டும், ”என்று ராமச்சந்திர டோம் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil