மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள புறநகர் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே கன்னத்தில் இளைஞர் ஒருவர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை அமைச்சராக இருப்பவர் ராம்தாஸ் அதவாலே. இவர் இந்திய குடியரசுக் கட்சியின் தலைவராகவும் உள்ளார். மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் இந்திய குடியரசுக் கட்சி அங்கம் வகிக்கிறது.
இந்நிலையில், மும்பையின் புறநகரான தானேயில் உள்ள அம்பர்நாத் பகுதியில் ஒரு நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, இரவு 10.15 மணியளவில் அமைச்சர் அதவாலே வெளியேறிய போது, இந்திய குடியரசுக் கட்சியின் கொடியைப் பிடித்துக்கொண்டு வந்த இளைஞர் ஒருவர், அமைச்சரை தன்னுடன் செல்ஃபி எடுக்கக் கோரினார்.
அப்போது, திடீரென அமைச்சரைக் கீழே தள்ளிய அந்த நபர், அவரின் கன்னத்தில் அறைந்தார். கொஞ்சம் கூட யாரும் எதிர்பார்க்காத இந்த சம்பவத்தைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் திகைத்தனர். அதற்குள் அந்த இளைஞர் தப்பித்து ஓட முயல, அங்கிருந்தவர்கள் அவரை வளைத்துப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் அமைச்சரின் பாதுகாவலர்களும் தங்கள் பங்கிற்கு அடித்து, அந்த இளைஞரை போலீஸில் ஒப்படைத்தனர். இந்த இளைஞரிடம் விசாரணை நடத்தியதில் அவரின் பெயர் பிரவின் கோசாவி என்பது தெரிந்தது. பிரவின் கோசாவி, இந்திய குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த இளைஞரிடம் அமைச்சரை அடித்தற்கான காரணத்தைக் கேட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய குடியரசுக் கட்சியின் மூத்த தலைவர்கள், இது திட்டமிட்ட தாக்குதல் என்றும், மஹாராஷ்டிரா மாநிலம் முழுவதும் இன்று பந்த் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.