scorecardresearch

சர்ச்சை கருத்தால் வலுக்கும் எதிர்ப்பு ; பின்வாங்கிய பாபா ராம்தேவ்; பின்னனி என்ன?

மருத்துவர்களின் மன உறுதியை சீர்குலைக்கும் விதமாகவும், தொற்றுநோய்க்கு எதிரான மருத்துவர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் விதமாகவும் உள்ள கருத்துகளை விலக்கிக் கொள்ளுமாறு பாபா ராம்தேவிடம் தெரிவித்த நிலையில், தனது கருத்துகளில் இருந்து அவர் பின்வாங்கி உள்ளார்.

சர்ச்சை கருத்தால் வலுக்கும் எதிர்ப்பு ; பின்வாங்கிய பாபா ராம்தேவ்; பின்னனி என்ன?

After Harsh Vardhan rap, Ramdev takes back allopathy statement : கொரோனா சிகிச்சையில் அலோபதி மருத்துவ பயன்பாடு தொடர்பாக, பாபாராம் தேவ் சர்ச்சை கருத்து வெளியிட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மருத்துவர்களின் மன உறுதியை சீர்குலைக்கும் விதமாகவும், தொற்றுநோய்க்கு எதிரான மருத்துவர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் விதமாகவும் உள்ள கருத்துகளை விலக்கிக் கொள்ளுமாறு பாபா ராம்தேவிடம் தெரிவித்த நிலையில், தனது கருத்துகளில் இருந்து அவர் பின்வாங்கி உள்ளார்.

இது தொடர்பான அறிக்கையை மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ட்விட்டரில் வெளியிட்டதோடு, பாபா ராம்தேவையும் டேக் செய்திருந்தார். மத்திய அமைச்சரின் அறிக்கையை அடுத்து, ராம்தேவ் பதில் கடிதத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், அவர் தனது கருத்தை திரும்பப் பெறுவதாக குறிப்பிட்டுள்ளார். நாங்கள் ஆயுர்வேதம் மற்றும் யோகாவைப் பயன்படுத்துவதன் மூலம், தொற்றுநோய்களின் போது பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளோம். எங்களின் இந்த மருத்துவமும் மதிக்கப்பட வேண்டும் என தனது கடிதத்தில் ராம்தேவ் குறிப்பிட்டுள்ளார். அலோபதி மருத்துவத்திற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டை தெரிவித்ததற்காக இந்திய மருத்துவ சங்கம் தொற்றுநோய் நோய்கள் சட்டத்தின் கீழ், ராம்தேவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த ஒரு நாள் கழித்து தனது நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொண்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனா வைரஸுக்கு மருந்தாக கொரோனில் என்ற மருந்தை அறிமுகப்படுத்தியது. மருந்து அறிமுக விழாவில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ராம்தேவ் உடன் மேடையை பகிர்ந்தது சர்ச்சையை கிளப்பியது. அந்த நிகழ்வில் பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் மருந்து அறிமுக விழாவில், உலக சுகாதார நிறுவனத்தின் சான்றிதழின் படி, கொரோனில் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் என அமைச்சர் கூறிய கருத்துக்கு கண்டனங்கள் வலுத்தன. இந்த நிலையில், கொரோனா சிகிச்சைக்கு என எந்த மருந்தையும் உலக சுகாதார மையம் பரிந்துரைக்கவில்லை என தெரிவித்திருந்தது. இந்த சம்பவத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது.

ஞாயிற்றுக்கிழமை, சமூக ஊடகங்களில் அண்மையில் ராம்தேவ் வீடியோவில்கூறிய கருத்துக்களைக் குறிப்பிட்டு, அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில், கொரோனாவுக்கு அலோபதி சிகிச்சை வழங்கப்படுவது கேலிக்கூத்தாகவும், பயனற்றதாகவும் என கூறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது என குறிப்பிட்டுள்ளார். அலோபதி மருத்துவம் மற்றும் மருத்துவர்கள் குறித்த ராம்தேவின் கருத்துக்கள் குறித்து பொது மக்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர் என்றும், அலோபதி மருந்து காரணமாக லட்சக்கணக்கான கொரோனா இறப்புகள் நிகழ்ந்துள்ளன என்ற அவரின் கருத்து மிகவும் துரதிர்ஷ்டவசமானது என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மருத்துவ சங்கத்தின் விமர்சனத்தைத் தொடர்ந்து, பதஞ்சலி நிறுவனத்தின் பொதுச் செயலாளர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா வெளியிட்ட அறிக்கையில், ராம்தேவ் நவீன விஞ்ஞானத்திற்கும் நவீன மருத்துவத்தின் நல்ல பயிற்சியாளர்களுக்கும் எதிராக எந்தவிதமான நோக்கத்தையும் கொண்டவர் இல்லை எனவும், அவருக்கு எதிராக தவறான கருத்துகள் கூறப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைகளுக்கு பிறகு, மீண்டும் ஞாயிறு அன்று ராம்தேவ் வெளியிட்ட பதிவில், அலோபதி மருத்துவர்கள் மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளனர் என்ற உண்மையை மதிக்கிறேன். சில அலோபதி மருத்துவர்கள் ஆயுர்வேதத்தையும் யோகாவையும் போலி அறிவியல் என்று அவமதிக்கக்கூடாது எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு முன்னதாக, அவர் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட 2 நிமிட வீடியோவில், கோவிட் சிகிச்சையில் அலோபதி மருந்துகள் தோல்வியடைந்ததாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.

ஹர்ஷ் வர்தன் சனிக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில், பால்கிருஷ்ணாவின் தெளிவுபடுத்தல் திருப்தி அளிக்கவில்லை என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் குறித்து ஒரு தீவிரமான தெளிவை அளிப்பதன் மூலமும், உலகெங்கிலும் உள்ள கொரோனா வீரர்களின் உணர்ச்சிகளை மதிப்பதன் மூலமும், உங்கள் ஆட்சேபகரமான மற்றும் துரதிர்ஷ்டவசமான அறிக்கையை நீங்கள் முழுமையாக வாபஸ் பெறுவீர்கள் என்று நம்புகிறேன் என்று அவர் ராம்தேவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

தொற்றுநோய்களின் போது, ​​அலோபதி மற்றும் அதனுடன் தொடர்புடைய மருத்துவர்கள், கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையை அளித்து வருகின்றனர். தொற்றுநோய்க்கு எதிராக இந்த போரில், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்கள், மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ள விதம் , அவர்களின் கடமை மற்றும் மனித சேவை மீதான அர்ப்பணிப்பு பிறவற்றால் ஒப்பிடமுடியாதது என ஹர்ஷ் வர்தன் தனது கடிதத்தில் கூறிப்பிட்டுள்ளார்.

இந்த சூழ்நிலைகளில், கொரோனாவுக்கு அலோபதி சிகிச்சையை கேலிக்கூத்தாகவும், பயனற்றதாகவும் உள்ளன என கூறுவது துரதிர்ஷ்டவசமானது. இன்று லட்சக்கணக்கான மக்கள் குணமடைந்து வீட்டிற்குச் செல்கின்றனர். நாட்டின் இறப்பு விகிதம் 1.13 சதவீதமாக இருந்து வருகிறது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் விகிதம் 88 சதவீதமாக உள்ளது. இந்த சாதனைக்கு பின்னால், அலோபதி மற்றும் மருத்துவர்களின் முக்கிய பங்களிப்பு உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

பெரியம்மை, போலியோ, எபோலா, SARS மற்றும் காசநோய்க்கான சிகிச்சைகள் அலோபதி மருத்துவத்தால் மட்டுமே சாத்தியப்படுத்தப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இன்று, தடுப்பூசிகள் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு எதிரான ஒரு முக்கிய ஆயுதமாக மாறியுள்ளன. இதற்கு அலோபதி மருத்துவ முறையே காரணமாகும். உங்கள் தெளிவுபடுத்தலில், உங்கள் நோக்கம் நவீன மருத்துவத்திற்கும், நல்ல மருத்துவர்களுக்கும் எதிரானது அல்ல என்று மட்டுமே கூறியுள்ளீர்கள். ராம்தேவின் தெளிவு போதுமானதாக இல்லை என்று கருதுவதாகவும் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். உங்கள் அறிக்கைகள் கொரோனா வீரர்களுக்கு அவமரியாதை செய்வது மட்டுமல்லாமல் மக்களின் உணர்ச்சிகளை ஆழமாக காயப்படுத்தி உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தொற்று நோய் காலங்களில், தற்போதைய சிகிச்சை நெறிமுறைகளை கேலிக்கூத்து என அழைப்பது, அலோபதி பற்றிய கேள்விகளை எழுப்புவதோடு மட்டுமல்லாமல், மருத்துவர்களின் திறன், நோக்கங்கள் குறித்தும் கேள்விகளை எழுப்புகிறது. இது மருத்துவர்களை அவமரியாதை செய்வதாகும். உங்கள் அறிக்கைகள் மருத்துவர்களின் மன உறுதியை உடைப்பதற்கும், தொற்றுநோய்க்கு எதிரான எங்கள் போராட்டத்தை பலவீனப்படுத்துவதாகவும் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் மிகப்பெரிய மருத்துவர்கள் சங்கமான ஐ.எம்.ஏ, ராம்தேவ் மீது நடவடிக்கை எடுக்கக் மத்திய சுகாதாரத் துறையை கேட்டுக் கொண்டுள்ளது. ராம்தேவ், நவீன அலோபதி மருத்துவத்தில் சேற்றை வீசுவதாக பாசாங்கு செய்கிறார். ஆனால், நவீன மருத்துவம் மருத்துவமனைகளில் நோய் வரும்போது பல முறை பயனடைந்துள்ளனர். அவர்களின் மருத்துவ முறைகளை பயன்படுத்தி, மக்களை மீட்கும் பொருட்டு அழைத்துச் செல்வது, வித்தியாசமான சித்தாந்தங்களை சந்தைப்படுத்துவது, விஞ்ஞான மருத்துவத்தை அவதூறு செய்வதன் மூலம் வியாபாரத்தை பெருக்குவது ஆகியவை மன்னிக்க முடியாத குற்றங்கள் என்று இந்திய மருத்துவ சங்கம் ராம்தேவ் மீது குற்றம் சாட்டி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Ramdev statement allopathic medicine harsh vardhan ima

Best of Express