சபரிமலை விவகாரம் காங்கிரஸ் பேச்சுவார்த்தை: சபரிமலையில் பல ஆண்டுகளாக குறிப்பிட்ட வயது பெண்களின் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. இதனை அடுத்து கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் ஆலயத்திற்குள் நுழையலாம் என்று தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பந்தளம் ராஜ குடும்பத்தினர் மக்களை ஒன்று திரட்டி சாலையில் ஊர்வலமாக சென்று தங்களின் எதிர்ப்பினை வெளியிட்டனர்.
இந்நிலையில் நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயன் “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை நாங்கள் அப்படியே பின்பற்றுவோம் என்றும், கேரள அரசு சார்பில் மறு சீராய்வு மனு போட மாட்டோம் என்றும், ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களுக்கு முறையான பாதுகாப்பினையும் வசதிகளையும் ஏற்படுத்தித் தருவோம் என்று கூறினார். அது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
சபரிமலை விவகாரம் காங்கிரஸ் பேச்சுவார்த்தை
இந்நிலையில் கேரள சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ரமேஷ் சென்னிதலா பந்தளம் ராஜ குடும்பத்தினரை நேரில் சந்தித்து பேசினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னிதலா காங்கிரஸ் கூட்டணி கேரளாவில் இருந்த சமயத்தில் ஐயப்பன் கோவில் பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்ததாக குறிப்பிட்டார். மேலும் இந்த பழக்க வழக்கம் 5000 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஐக்கிய ஜனநாயக கூட்டணி இன்று திருவிதாங்கூர் தேவசம் போர்டின் உறுப்பினர்கள், தலைவர்கள், மற்றும் நிர்வாகிகளுடன் உச்ச நீதிமன்ற தீர்ப்பினைக் குறித்து கலந்தாலோசிக்க முடிவெடுத்துள்ளது என்று ரமேஷ் சென்னிதலா கூறியிருக்கிறார்.