அசோக சக்ரா விருது வழங்கியபோது கண் கலங்கிய ராம்நாத் கோவிந்த்!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கண்கலங்கியதைக் கண்ட, நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பலரும் சோகத்தில் கண்கலங்கியதை பார்க்க முடிந்தது.

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் வீர மரணம் அடைந்த ஜோதி பிரகாஷ் நிராலாவின் குடும்பத்தாரிடம் அசோக சக்ரா விருது வழங்கிய போது, ஜனாதிபதிபதி ராம்நாத் கோவிந்த் கண்கலங்கினார்.

நாட்டின் 69 ஆவது குடியரசு தின விழா டெல்லி ராஜ்பாத்தில் நேற்று விமர்சியாக கொண்டாடப்பட்டது. இதில் முதன் முறையாக இந்தோனேஷியா, சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, லாவோஸ், மியான்மர், கம்போடியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய 10 நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

இந்திய நாட்டின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றினார். அதன் பின்பு, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களிடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

அப்போது, காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான மோதலின் போது வீரமரணம் அடைந்த விமானப்படையை சேர்ந்த ஜோதி பிரகாஷ் நிராலாவை கவுரவிக்கும் வகையில் அசோக சக்ரா விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதை அவரின், தாய் மற்றும் மனைவியிடம் வழங்கிய போது, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். ராம்நாத் கோவிந்த் கண்கலங்கியதைக் கண்ட, நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பலரும் சோகத்தில் கண்கலங்கியதை பார்க்க முடிந்தது.

கடந்த நவம்பர் மாதம் காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற மோதலில் பிரகாஷ் நிராலா கடுமையான போர்த் தந்திரத்துடன் செயல்பட்டு 2 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினார். இந்த போரில் ஜோதி பிரகாஷ் நிராலாவும் வீரமரணம் அடைந்தார்.

×Close
×Close