ரஞ்சன் கோகாய் : அக்டோபர் 3ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பேற்கிறார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவி காலம் வருகின்ற அக்டோபர் 2ம் தேதியுடன் முடிவிற்கு வருகிறது. அவரைத் தொடர்ந்து புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க ரஞ்சன் கோகாய் அவரின் பெயரினை பரிந்துரை செய்தது கொலீஜியம்.
ரஞ்சன் கோகாய் – புதிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் அவர்களை நியமித்திருக்கிறார். வருகின்ற அக்டோபர் 3ம் தேதி அவர் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார்.
அசாம் மாநிலத்தில் நவம்பர் மாதம் 18ம் தேதி, 1954ல் பிறந்தவர் கோகாய். அவருடைய தந்தை அசாம் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராவார்.
சட்டப்பணியில் கோகாய்
1978ம் ஆண்டு நவம்பர் மாதம் கௌஹாத்தியில் தன்னுடைய சட்ட பணியை ஆரம்பித்தவர். 2001ம் ஆண்டு கௌஹாத்தி உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். 2010ம் ஆண்டு கௌஹாத்தியில் இருந்து பஞ்சாப் – ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார்.
பின்னர் 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அங்கு தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 2012ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வந்தார். 46வது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்கிறார் ரஞ்சன் என்பது குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் 13 மாதங்கள் நீடிக்க இருக்கும் இவரின் பணிக்காலம் நவம்பர் 17, 2019உடன் முடிவிற்கு வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் நான்கு நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு எதிராக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் புகார்கள் அளித்தவர்களில் ரஞ்சன் கோகாயும் ஒருத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.