காங்கிரஸ் மற்றும் உத்தவ் சிவசேனாவின் புகார்களின் அடிப்படையில் மகாராஷ்டிரா காவல்துறைத் தலைவரும் மாநிலத்தின் முதல் பெண் காவல்துறை இயக்குநருமான (டி.ஜி.பி) ராஷ்மி சுக்லாவை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. நவம்பர் 20ஆம் தேதி மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Newsmaker | Who is Rashmi Shukla, and why Opposition wanted her out as Maharashtra DGP
உடனடியாக அமலுக்கு வரும் வகையில் கேடரில் அடுத்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியிடம் பொறுப்பை ஒப்படைக்குமாறு ராஷ்மி சுக்லா கேட்டுக் கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. டி.ஜி.பி.,யாக நியமனம் செய்ய மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பெயர்களை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணிக்குள் அனுப்புமாறு மாநில தலைமைச் செயலாளரை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது.
1988-பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான ராஷ்மி சுக்லா, கடந்த ஐந்தாண்டுகளில் பெரும்பாலான அதிகாரிகள் தங்கள் முழு வாழ்க்கையிலும் செய்ததை விட அதிகமான ட்விஸ்ட்களையும் திருப்பங்களையும் கண்டுள்ளார். துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸின் ஆதரவு பெற்ற அதிகாரியாகக் காணப்பட்ட ராஷ்மி சுக்லா, மாநில உளவுத் துறையின் (SID) ஆணையராகப் பணியாற்றினார், இந்த பதவி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு நெருக்கமான அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படுவதாகக் கருதப்படுகிறது.
2019 இல் ஆட்சிக்கு வந்த பிறகு, மஹா விகாஸ் அகாடி (MVA) ராஷ்மி சுக்லா உட்பட முந்தைய தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான நிர்வாகத்திற்கு நெருக்கமானவர்கள் என்று கருதப்பட்ட பல அதிகாரிகளை ஓரங்கட்டியது. அதிகாரிகள் மாற்றத்தின் போது, ராஷ்மி சுக்லாவும் உளவுத் துறையில் இருந்து சிவில் பாதுகாப்புக்கு மாற்றப்பட்டார், இது நிர்வாக அதிகாரமற்ற பதவியாகக் கருதப்படுகிறது. ராஷ்மி சுக்லா உட்பட பல அதிகாரிகள் இந்த காலக்கட்டத்தில் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டனர். ராஷ்மி சுக்லா மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) கூடுதல் டைரக்டர் ஜெனரலாகவும், பின்னர் சசாஸ்திர சீமா பாலின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
ராஷ்மி சுக்லா மகாராஷ்டிராவில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆட்சியின் போது உத்தவ் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், என்.சி.பி.,யின் ஏக்நாத் காட்சே மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டதற்காக பிப்ரவரி மற்றும் மார்ச் 2022 இல் புனே மற்றும் மும்பையில் தலா இரண்டு எஃப்.ஐ.ஆர்.,கள் ராஷ்மி சுக்லா மீது பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கை மேற்கோள் காட்டி அக்டோபர் 31 அன்று தேர்தல் ஆணையத்திற்கு நானா படோல் கடிதம் எழுதியுள்ளார், மேலும் மகாராஷ்டிரா போலீஸ் சட்டத்தை மீறி ராஷ்மி சுக்லாவுக்கு அரசாங்கம் "சட்டவிரோதமாக கால நீட்டிப்பு வழங்கியது" என்று கூறினார். ராஷ்மி சுக்லா ஜூன் 30ம் தேதி ஓய்வு பெறுவதாக இருந்தது.
தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, மும்பை போலீஸ் குழு இந்த வழக்கு தொடர்பாக ஹைதராபாத்தில் ராஷ்மி சுக்லாவின் வாக்குமூலத்தை பதிவு செய்த பிறகு, அவர் நீதிமன்றத்தை நாடினார். பின்னர் போலீசார் மற்றொரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர், அதில் ராஷ்மி சுக்லா குற்றம் சாட்டப்படவில்லை.
ஜூன் 2022 இல் ஏக்நாத் ஷிண்டே அரசாங்கம் பதவிக்கு வந்த பிறகு, மூன்றாவது வழக்கு மத்திய புலனாய்வுப் பணியகத்திற்கு (சி.பி.ஐ) மாற்றப்பட்டது. செப்டம்பர் 2023 இல், பம்பாய் உயர்நீதிமன்றம் ராஷ்மி சுக்லா மீது பதிவு செய்யப்பட்ட மூன்று எஃப்.ஐ.ஆர்.,களில் இரண்டை ரத்து செய்தது. பின்னர், சி.பி.ஐ.,யின் மூடல் அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட பிறகு மூன்றாவது வழக்கும் மூடப்பட்டது, இது ராஷ்மி சுக்லா மீண்டு மகாராஷ்டிரா திரும்புவதற்கு வழி வகுத்தது.
எம்.வி.ஏ அரசாங்கம் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டதால், தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு நெருக்கமாக இருந்ததால் பாதிக்கப்பட்ட அதிகாரிகள் மீண்டும் அழைத்து வரப்பட்டு "போதுமான இழப்பீடு" வழங்கப்படும் என்ற ஊகம் இருந்தது. மாநிலத்தில் மிகவும் விரும்பப்படும் பதவியான மும்பை கமிஷனர் பதவியில் ராஷ்மி சுக்லா ஆர்வமாக இருந்ததாக கூறப்படுகிறது, அவர் மாநில காவல்துறைத் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று அரசாங்கம் விரும்பியது. 2023 அக்டோபரில் பா.ஜ.க தலைவர் சுதிர் முங்கந்திவார் டி.ஜி.பி ஆவதற்கு வாழ்த்து தெரிவித்ததை உள்ளடக்கிய நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, மாநில அரசு அவரை இந்த ஜனவரியில் மாநிலத்தின் உயர் காவல்துறை அதிகாரியாக அதிகாரப்பூர்வமாக நியமித்தது.
ராஷ்மி சுக்லாவின் நியமனம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை குறிவைத்து, அதை ரத்து செய்யுமாறு ஷிண்டேவை வலியுறுத்தியது. என்.சி.பி (ஷரத்சந்திர பவார்) செய்தித் தொடர்பாளர் வித்யா சவான், ராஷ்மி சுக்லாவின் நியமனம் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) விதிமுறைகளை மீறுவதாகக் கூறினார். டி.ஜி.பி பதவிக்கு 6 மாதங்களுக்கு மேல் பணிபுரியும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பரிசீலிக்கப்படுகிறார்கள். இருப்பினும், ராஷ்மி சுக்லா ஐந்து மாதங்களில் ஓய்வு பெறுவார், மேலும் அவரது நியமனம் சட்டப்படி மோசமானது,” என்று வித்யா சவான் கூறினார்.
நியமனம் குறித்து பதிலளித்த என்.சி.பி தலைவர் சரத் பவார், “அவரது மீதமுள்ள பதவிக்காலம் எவ்வாறு தொடரும் என்பதை நாங்கள் பார்ப்போம். சுமார் ஆறு மாதங்கள் என்று நினைக்கிறேன். இப்போது நாம் எடுக்க வேண்டிய ஒரே முன்னெச்சரிக்கை என்னவென்றால், எங்கள் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்காமல் இருப்பதை உறுதிசெய்வதுதான்,” என்று கூறினார். லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களை கருத்தில் கொண்டு ஆளும் கூட்டணி ராஷ்மி சுக்லாவை நியமித்ததாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.