/indian-express-tamil/media/media_files/2025/01/31/6j6tRMAlULvvEHgYXi5q.jpg)
குடியரசு தலைவர் முர்மு குறித்த சோனியா காந்தியின் கருத்துக்கு ராஷ்டிரபதி பவன் பதில்: "காங்கிரஸின் சில முக்கிய தலைவர்களின்" அறிக்கைகளை ராஷ்டிரபதி பவன் கவனத்தில் எடுத்துக் கொண்டது. அவை "உயர் பதவியின் கண்ணியத்தை தெளிவாகக் காயப்படுத்துகின்றன. எனவே, அவை ஏற்றுக்கொள்ள முடியாதவை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘In poor taste…entirely avoidable’: Rashtrapati Bhavan responds to Sonia Gandhi’s remark on President Murmu’s address
பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்து கருத்து தெரிவித்திருந்தார். இதன் சில மணி நேரங்கள் கழித்து ராஷ்டிரபதி பவன் செய்தித் தொடர்பாளர் அஜய் சிங், அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
"இறுதியில் குடியரசு தலைவர் சோர்வாக இருந்தார். அவரால் பேச முடியவில்லை" என அமர்வுக்கு பிறகு சோனியா காந்தி தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து பெயர் குறிப்பிடாமல், இந்தக் கருத்துகள் புண்படுத்தும் வகையில் இருந்ததாகவும், இதனை முற்றிலும் தவிர்த்திருக்கலாம் என்றும் ராஷ்டிரபதி பவன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
"குடியரசு தலைவர் இறுதியாக சோர்வடைந்து விட்டதாகவும், அவரால் பேச முடியவில்லை எனவும் சில தலைவர்கள் கூறுகின்றனர். உண்மைக்கு அப்பால் எதுவும் இருக்க முடியாது என்பதை ராஷ்டிரபதி பவன் தெளிவுபடுத்த விரும்புகிறது. எந்த சூழலிலும் குடியரசு தலைவர் சோர்வடையவில்லை. விளிம்பு நிலை மக்களுக்காகவும், பெண்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் பேசும் போது ஒரு போதும் சோர்வடைய முடியாது என குடியரசு தலைவர் நம்புகிறார்" என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
"இந்தத் தலைவர்கள் இந்தி போன்ற இந்திய மொழிகளில் உள்ள பேச்சுவழக்கு குறித்து அறிந்திருக்காமல், இது போன்ற கருத்துகளை கூறியிருக்கலாம் என குடியரசு தலைவர் அலுவலகம் நம்புகிறது. எனினும், இந்த கருத்துகள் மிகவும் மலிவானவை, துரதிர்ஷ்டவசமானவை மற்றும் முற்றிலும் தவிர்க்கக்கூடியவை" என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோனியா காந்தியின் கருத்துக்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, குடியரசு தலைவருக்கு அவமரியாதை ஏற்படுத்தும் விதமாக கருத்து கூறப்படவில்லை என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
"இந்த மாதிரியான விஷயம் ஊடகங்களால் திரிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது. குடியரசு தலைவர் மீது சோனியா காந்தி மிகுந்த மரியாதை கொண்டுள்ளார். எனது தாயார் 78 வயதான பெண்மணி. பாவம், இவ்வளவு நீண்ட உரையை படித்த பின்னர் குடியரசு தலைவர் சோர்வடைந்திருப்பார்" என்று சோனியா காந்தி கூறியதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.