மறைந்த பழம்பெரும் இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடா, தன்னுடன் பணியாற்றிய பலருக்கும் தனது சொத்தில் பங்கு இருப்பதாக உயில் எழுதி வைத்துள்ளது பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான மறைந்த ரத்தன் டாடாவின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 10 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. பெறப்பட்ட தகவல்களின் படி, டாடாவின் உயிலில் அவரது சமையல் கலைஞர், அவரது பணியாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் சொத்தில் பங்கு என எழுதியுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும், டாடா எஸ்டேட்டின் கணிசமான பகுதி, RTEF அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் டாடா சன்ஸ் குழுமத்தின் அவரது 0.83 சதவீத பங்குகளும் அடங்கும்.
டாடாவின் குறிப்பிடத்தக்க சொத்துகளாக அலிபாகில் உள்ள கடற்கரை பங்களா, அவரே தனிப்பட்ட முறையில் வடிவமைத்த 2 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ள வீடு மற்றும் ஜுஹு தாரா சாலையில் அமைந்துள்ள இரண்டடுக்கு மாடி குடியிருப்பு உள்ளிட்டவை கருதப்படுகிறது. இதில் அவரது பரம்பரை வீடான இரண்டடுக்கு மாடி குடியிருப்பு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மூடியுள்ளது. இது ஏலத்தில் விடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, சுமார் ரூ. 350 கோடி வைப்பு நிதியாக உள்ளது.
ரத்தன் டாடா தனது உயிலில் பல ஆண்டுகளாக அவருக்கு சேவை செய்தவர்களை குறிப்பிட்டுள்ளார். டாடா-விற்கு சமையல் கலைஞராக பணியாற்றிய ராஜன் ஷா என்பவரின் பெயர் உயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரத்தன் டாடா வளர்த்த டிடோ என்ற நாயை, ராஜன் ஷா-வே பராமரிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்தன் டாடாவிடம் பட்லராக பணியாற்றிய சுப்பையா என்பவருக்கும் நிதிப்பலன்கள் வழங்க வேண்டுமென உயிலில் எழுதப்பட்டுள்ளது. ரத்தன் டாடா தனது வெளிநாட்டு பயணங்களின் போது, அவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஆடைகளை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரத்தன் டாடா வசித்து வந்த ஹலேகய் குடியிருப்பை என்ன செய்வது என்ற முடிவை, டாடா சன்ஸ் துணை நிறுவனமான எவார்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் தீர்மானிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ரத்தன் டாடாவிடமிருந்த 20-30 சொகுசு கார்களும் டாடா அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படலாம். இல்லையெனில் அவை விற்பனைக்கு வரவும் வாய்ப்பு இருக்கிறது.
ரத்தன் டாடா அவரது உயிலில், தனது நெருங்கிய நண்பரான சாந்தனு நாயுடுவின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். சாந்தனு நாயுடுவுக்கு தனது நிறுவனத்தில் ஒரு பங்கு வழங்க வேண்டுமெனவும், அவரது வெளிநாட்டு கல்வி செலவுகளை ஏற்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.