Advertisment

ரேஷன் ஊழல்; 20 மணி நேர விசாரணை: மேற்கு வங்க அமைச்சரை கைது செய்த இ.டி

ரேஷன் ஊழல் தொடர்பாக சுமார் 20 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறையினர் அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக்கை அதிரடியாக கைது செய்தனர்.

author-image
WebDesk
New Update
ration scam Bengal minister Jyotipriya Mallick arrested by ED Tamil News

ஜோதிப்ரியா மல்லிக் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரது வீட்டில் நேற்று அமலாக்கத்துறை அதிரடி சோதனைகளை நடத்தியது.

West-bengal | mamata-banerjee Enforcement Directorate: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருந்து வரும் ஜோதிப்ரியா மல்லிக் அமலாக்கத்துறையினரால் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3.23 மணிக்கு கைது செய்யப்பட்டார். அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக் முன்னாள் உணவு அமைச்சராக இருந்த நிலையில், ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்வதில் பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாகவும், சட்டவிரோத பணப் பரிப்மாற்றம் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

Advertisment

இதனையடுத்து, ஜோதிப்ரியா மல்லிக் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரது வீட்டில் நேற்று அமலாக்கத்துறை அதிரடி சோதனைகளை நடத்தியது. கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் உள்ள ஜோதிப்ரியா மல்லிக் வீட்டில் இந்த சோதனைகள் நடைபெற்றன. அவரது உதவியாளர் உள்ளிட்ட 8 பேர் வீடுகளிலும் இந்த சோதனை நடந்தது.

இந்நிலையில், ரேஷன் ஊழல் தொடர்பாக சுமார் 20 மணி நேரத்துக்கும் மேலாக அமலாக்கத்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். இதன் பின்னர், இன்று அதிகாலை அமலாக்கத்துறையினரால் ஜோதிப்ரியா மல்லிக் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் பாகிபுர் ரஹ்மானுடன் ஜோதிப்ரியா மல்லிக்கின் தொடர்பு குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

சால்ட் லேக்கில் உள்ள அவரது வீட்டில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் துணை ராணுவத்தினர் (சி.ஆர்.பி.எஃப்) அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, ​​"நான் ஒரு பெரிய சதித்திட்டத்திற்கு பலியாகியுள்ளேன்" என்று ஜோதிப்ரியா மல்லிக் கூறினார்.

ஆங்கிலத்தில் படிக்கவும்: Bengal minister Jyotipriya Mallick arrested by ED in ‘ration scam’, says ‘I am victim of grave conspiracy’

ஜோதிப்ரியா மல்லிக் தொடர்பில் இருப்பதாக கூறப்படும் தொழிலதிபர் பாகிபுர் ரஹ்மான் வீட்டில் கடந்த வாரம் சுமார் 53 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனைக்குப் பின் அவரை கைது செய்தனர். பாகிபுர்  ரஹ்மான் ரைஸ் மில் வியாபாரம் தவிர பல ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் மற்றும் பார்கள் வைத்திருக்கிறார். அவரது வீடு அரசு அலுவலகங்களின் முத்திரைகளுடன் 100 க்கும் மேற்பட்ட ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், அவரது நிறுவனங்களில் ரூ.50 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக  அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக்கின் கைது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக தலைமையிலான மத்திய அரசு மற்றும் மத்திய அமைப்புகளை கடுமையாக சாடினார். துர்கா பூஜைக்குப் பிறகு தனது கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். "திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) தலைவர்களின் வீட்டை மத்திய அமைப்புகள் சூறையாடுகிறது. அவர்கள் நெய் மற்றும் எண்ணெய் பாட்டில்களை கீழே இழுக்கிறார்கள். சோதனை என்ற பெயரில் புடவைகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களின் படங்களை எடுக்கிறார்கள்," என்று அவர் குற்றம் சாட்டினார்.

இதுவரை  ஏன் ஒரு பாஜக தலைவரின் வீட்டில் சோதனை கூட நடத்தப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய முதல்வர் மம்தா பானர்ஜி, “முதலமைச்சரின் மகன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. என் கேள்வி என்னவென்றால், நாடு இப்படித்தான் இயங்குமா? அவர்கள் எப்போது வேண்டுமானாலும் சட்டத்தை மாற்றுகிறார்கள். எப்போது வேண்டுமானாலும் நிலைக்குழு கூட்டத்தை கூட்டி வருகின்றனர். திடீரென்று இந்தியாவின் பெயரை மாற்றுங்கள், பாரதத்தைப் பயன்படுத்தத் தொடங்குங்கள் என்று சொல்கிறார்கள். ஏன் இப்படி பயப்படுகிறார்கள்?

பாலுவுக்கு (ஜோதிப்ரியா மல்லிக்கிற்கு) ஏற்கனவே சர்க்கரை நோய் உள்ளது. அவரது உடல் நிலையும் மிகவும் மோசமாக உள்ளது. அவர் ஒருவேளை இறந்தால், பா.ஜ.க மற்றும் அமலாக்க அமைப்புகளுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வேன்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, தொழிலதிபர் பாகிபுர் ரஹ்மானுக்கு 2012 முதல் ஜோதிப்ரியா மல்லிக்கைத் தெரியும் என்றும், "இது மிகப் பெரிய மோசடி," என்று அவர் குற்றம் சாட்டினார்.

“ஆச்சரியப்படுவதற்கில்லை, சோதனை முன்பே நடந்திருக்க வேண்டும். பாகிபுர் ரஹ்மானுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுடன் தொடர்பு இருப்பதை ஏஜென்சி கண்டறிந்துள்ளது. இந்த சொத்துக்கள் உண்மையில் யாருடையது என்பது ரகசியமாக உள்ளது” என்று பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார் குற்றம் சாட்டினார்.

தொழிலதிபர் பாகிபுர் ரஹ்மான் மூத்த டி.எம்.சி தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் உதவியுடன் செயல்படுவதாக மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி முன்பு குற்றம் சாட்டியிருந்தார். நேற்று அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக பேசிய அவர், “இது ஒரு பெரிய ஊழல். உணவுத்துறை அமைச்சர் முதல் ரேஷன் டீலர்கள் வரையிலும், காவல்துறையினரும் கூட இதில் ஈடுபட்டுள்ளனர். நாங்கள் அனைவரும் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான நடவடிக்கை மற்றும் தண்டனையை விரும்புகிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாங்கள் அப்படி எதையும் பார்க்கவில்லை." என்று கூறினார். 

கொரோனா தொற்று பரவலின் போது உணவு தானியங்களின் விலை எட்டியது. அதில் பாகிபுர் ரஹ்மானுக்கு முக்கிய பங்கு உண்டு என்றும், "பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவுக்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டில் இருந்தும் உணவு தானியங்கள் திருடப்பட்டுள்ளன," என்றும்  காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம் சாட்டினார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், மம்தா பானர்ஜி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர் அர்பிதா பானர்ஜி ஆகியோர் பள்ளி வேலை மோசடியில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டனர். தவிர திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் பலரும் அமலாக்கத்துறை, சி.பி.ஐ, வருமானவரித்துறை வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக் கைது செய்யப்பட்டுள்ளது மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Enforcement Directorate Mamata Banerjee West Bengal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment