Rahul Gandhi goes Thailand while election time: மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்யாமல் தாய்லாந்துக்கு சென்றுள்ளது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சி கடந்த மக்களவைப் பொதுத்தேர்தலில் படுதோல்வியடைந்தது. மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்ட ராகுல் காந்தி கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியில் யார் தலைவர் என்ற ஒரு குழப்பமான சூழல் ஏற்பட்டதையடுத்து, சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சியினர் பலரும் ராகுல் காந்தியை நம்பிக்கையுடன் பார்த்துவந்த நிலையில் அவர் ராஜினாம செய்தது காங்கிரஸ் தொண்டர்கள் பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையம் மகாராஷ்டிராடி, ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு சட்டப் பேரவைத் தேர்தலை அறிவித்தது. வருகிற 21 ஆம் தேதி இந்த இரண்டு மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், ஏற்கெனவே பாஜக ஆளும் இந்த மாநிலங்களில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று பாஜக தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால், காங்கிரஸ் தரப்பிலோ மந்தமாகத்தான் காணப்படுகிறது.
இதனிடையே, ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த அசோக் தன்வார் அண்மையில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அப்போது அவர், காங்கிரஸில் ராகுல் காந்தியின் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், மகாராஷ்டிரா, ஹரியான ஆகிய இரண்டு மாநிலங்களின் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தி பிரசாரம் செய்து கட்சி வெற்றி பெற நம்பிக்கை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராகுல் காந்தி தாய்லாந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். இதனால், காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.