Ravi Shankar Prasad denies economic slowdown: தேசிய விடுமுறை நாளில் மூன்று திரைப்படங்களின் வெற்றியை மேற்கோள் காட்டி நாடு பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்கிறது என்று கூறுவதை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சனிக்கிழமை மறுத்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
“தேசிய விடுமுறை நாட்களில் ஒன்றான அக்டோபர் 2 ஆம் தேதி, மூன்று இந்தி திரைப்படங்கள் அந்த நாளில் ரூ.120 கோடி வசூலித்ததாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
“நாட்டில் பொருளாதாரம் சிறப்பாக இல்லாவிட்டால், ஒரே நாளில் மூன்று திரைப்படங்கள் மட்டும் இவ்வளவு வணிக வசூலை எவ்வாறு பெற முடியும்?” என்று ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். அவர் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் அக்டோபர் 21 ஆம் தேதி பாஜகவுக்கு பிரசாரம் செய்வதற்காக மும்பையில் உள்ளார்.
மேலும், 2017 ஆம் ஆண்டில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் வேலையிண்மை உச்சபட்ச விகிதத்தை அடைந்துள்ளது என்ற தேசிய ஆய்வு அலுவலகத்தின் அறிக்கை தவறானது என்று ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
அக்டோபர் 12 ஆம் தேதி மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜகவுக்காக பிரச்சாரம் செய்ய அவர் மும்பையில் இருந்தார்.
என்.எஸ்.எஸ்.ஓ -வின் குறிப்பிட்ட கால அளவிலான தொழிலாளர் கணக்கெடுப்பு சர்வே (பி.எல்.எஃப்.எஸ்) வேலையின்மை விகிதம் கடைசியாக 1972-73ல் மற்றும் 2011-12-ல் 2.2 சதவீதமாக இருந்தது என்று கூறியது.
இந்த அறிக்கை தொடர்பாக மத்திய அரசை விமர்சித்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் இரண்டு கோடி வேலைவாய்ப்புகளுக்கு உறுதியளித்ததாகக் கூறியிருந்தது. ஆனால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, கசிந்த வேலைவாய்ப்பை உருவாக்கும் அறிக்கையானது ஒரு தேசிய பேரழிவு ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறினார்.
என்.எஸ்.எஸ்.ஓ அறிக்கையைப் பற்றி ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், “இங்கே பொருளாதாரம் சிறப்பாக செயல்படுகிறது என்று பத்து அளவீடுகளை நான் உங்களுக்கு வழங்கியுள்ளேன். ஆனால், (என்.எஸ்.எஸ்.ஓ) அறிக்கையில் ஒன்று கூட பிரதிபலிக்கவில்லை. எனவே, நான் இதை தவறான அறிக்கை என்று அழைக்கிறேன்.” என்று கூறினார்.
பல்வேறு துறைகள் சிறப்பாக செயல்படுகின்றன என்பதை மீண்டும் வலியுறுத்திய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மேலும் கூறியதாவது: “மின்னணு உற்பத்தி, தகவல் தொழில்நுட்பத் துறை, முத்ரா கடன், வர்த்தக சேவைகள் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன. அனைவருக்கும் அரசு வேலைகளை வழங்குவோம் என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லை.” என்று கூறினார்.
புதன்கிழமை, சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) இந்த ஆண்டு இந்தியாவிலும் பிரேசிலிலும் பொருளாதார மந்தநிலை அதிகமாக காணப்படுகிறது என்று கூறியிருந்தது. இருப்பினும், இந்த அளவீடு முழுமையற்றது என்று அதை ரவிசங்கர் பிரசாத் எதிர்த்தார். மேலும், அரசாங்கத்திற்கு எதிராக அமைப்பாக்கப்பட்ட சிலர் வேலையின்மை சூழ்நிலை குறித்து பொதுமக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்தியாவையும் பிரேசிலையும் சுட்டிக்காட்டி, சர்வதேச நாணய நிதியத்தின் எம்.டி. கிறிஸ்டாலினா ஜார்ஜீவா, உலகில் 90 சதவீதம் பேர் 2019-இல் மெதுவான வளர்ச்சியைப் பெற வாய்ப்புள்ளது என்று கூறியிருந்தார். அவருடைய அறிக்கைக்கு பதிலளித்த ரவிசங்கர் பிரசாத், “இந்தியா குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் அளவீடு இன்னும் முழுமைஇல்லாதது என்பதை மறந்துவிடாதீர்கள். மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்தபோது இந்தியா 11 வது இடத்தில் இருந்தது; இன்று ஐந்தாவது பெரிய நாடாக உள்ளது. நாங்கள் பிரான்சைக் கூட மிஞ்சிவிட்டோம்.” என்று கூறினார்.
உலக போட்டி குறியீட்டு அறிக்கையில் இந்தியாவின் பத்து இடங்களுக்கு வீழ்ந்தது பற்றி தகவல்கள் வெளியானது. அதற்கு ஒரு நாள் கழித்து, அரசாங்க தரவுகள், தொழிற்சாலை உற்பத்தி ஆகஸ்ட்டில் 1.1 சதவீதம் சுருங்கிவிட்டது என்றும் இது ஏழு ஆண்டுகளில் மிக மோசமான செயல்திறன் என்றும் தகவல் வெளியான நிலையில் ரவிசங்கர் பிரசாத்தின் இந்த கருத்துகள் வந்துள்ளன.
ரவி சங்கர் பிரசாத்தின் இத்தகைய கருத்திற்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில் தற்போது தன்னுடைய கருத்தினை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். மேலும் என்னுடைய முழுமையான பேச்சும் அந்த வீடியோவில் உள்ளது. நான் கூறிய கருத்துகளில் ஒன்று மட்டும் மக்கள் மத்தியில் தவறாக சென்று சேர்ந்துள்ளது. என்னுடைய கருத்திற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி ட்வீட் செய்துள்ளார் அவர்.