RBI Governor Urjit Patel : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவி வகித்து வந்த உர்ஜித் படேல் தன்னுடைய பதவியை இன்று ராஜினாமா செய்தார். மத்திய அரசிற்கும், இந்திய ரிசர்வ் வங்கிக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்த நிலையில் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினர் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
ஆர்.பி.ஐ ஆளுநர் உர்ஜித் படேல் (RBI Governor Urjit Patel ) ராஜினாமா
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக பணியாற்றி வந்தார் உர்ஜித் படேல். 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் தேதி ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவி ஏற்றார் உர்ஜித் படேல். ஆர்.பி.ஐயில் இருக்கும் உபரிநிதியை மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்வது தொடர்பாகவும், மத்திய அரசிற்கு தேவையான கடனை வழங்குவது தொடர்பாகவும் ஆர்.பி.ஐக்கும் மத்திய அரசிற்கும் இடையில் பிரச்சனை நிலவி வந்தது.
மேலும் வங்கிகளில் வாராக்கடன் அதிகமானதற்கு காரணம் இந்திய ரிசர்வ் வங்கி தான் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தன்னுடைய குற்றச்சாட்டினை ரிசர்வ் வங்கியின் மீது வைத்தார். இதனைத் தொடர்ந்து சொந்த காரணங்களுக்காக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக இன்று அறிவித்திருக்கிறார்.
ஏற்கனவே இந்தியாவின் தலைமை நிதி ஆலோசகராக செயல்பட்டு வந்த அரவிந்த் சுப்ரமணியன், இப்படியான ஒரு காரணம் சொல்லி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உர்ஜித் படேல் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் தேதி ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவி ஏற்றார். பதவிக்காலம் முடிவடைய இன்னும் ஒரு வருடம் நிலையில் இப்படியான முடிவினை அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில், "ரிசர்வ் வங்கியின் நிதி நிலையில் நிலைத்தன்மையை ஏற்படுத்தியவர் உர்ஜித் படேல். ரிசர்வ் வங்கி துணை ஆளுநராகவும், ஆளுநராகவும் 6 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
வங்கிகளில் ஒழுங்கமைப்பை ஏற்படுத்தி அதனை உறுதியும் செய்தார். உர்ஜித் படேலின் ராஜினாமா வங்கித்துறைக்கு மிகப்பெரிய இழப்பு" என்று குறிப்பிட்டுள்ளார்.
புதிய ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த சக்திகந்த தாஸை தேர்வு செய்திருக்கிறது மத்திய அரசு. அவர் 12/12/2018 அன்று ஆர்.பி.ஐ ஆளுநராக பதவியேற்றிருக்கிறார்.