போராட்டத்தில் எதிர்ப்பு தெரிவிப்பதற்காக டெல்லிக்கு டிராக்டர்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் நன்றாக திட்டமிடப்பட்ட சதித்திட்டத்தின் மூலம் டிராக்டர்கள் விற்பனை கணிசமான அளவிற்கு வேகமாக உயர்ந்துள்ளது என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளபடி, பஞ்சாப் இந்த மூன்று மாதங்களில் டிராக்டர்களின் விற்பனையில் மிகப்பெரிய அதிகரிப்பைக் கண்டுள்ளது. டிராக்டர் விற்பனை டிசம்பர் 2020ல் 94.30 சதவிகிதம் உயர்ந்துள்ளது. டிசம்பர், 2019ல் 790 டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டதுடன் ஒப்பிடுகையில், டிசம்பர் 2020ல் 1,535 டிராக்டர்கள் விற்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
விவசாயிகல் போராட்டக்காரர்களில் ஒரு பிரிவினர் குடியரசு தின வன்முறை சம்பவத்தில் ஆழ வேரூன்றியிருப்பது நன்கு திட்டமிடப்பட்ட சதி என்ற குற்றச்சாட்டில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் நவம்பர் 2020 மற்றும் ஜனவரி 2021 மாதங்களுக்கு இடையில் டிராக்டர்கள் விற்பனை பெரிய அளவில் உயர்ந்துள்ளதாக டெல்லி போலீஸ் குறிப்பிட்டுள்ளது.
அதே போல, ஜனவரி, 2020ல் 1,534 டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டதுடன் ஒப்பிடும்போது, ஜனவரி, 2021ல் 2,840 டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டு 85.13 சதவீதம் டிராக்டர்கள் விற்பனை அதிகரித்துள்ளது. நவம்பர், 2019ல், 1,330 டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டதுடன் ஒப்பிடுகையில், நவம்பர், 2020ல் 1, 909 டிராக்கர்கள் விற்பனை செய்யப்பட்டு 43.53 சதவீதம் டிராக்டர் விற்பனை அதிகரித்துள்ளது என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவில், நவம்பர், 2019ல் 2,408 டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டதுடன் ஒப்பிடும்போது, நவம்பர், 2020ல் டிராக்டர் விற்பனை 31.81 சதவீதம் அதிகரித்துள்ளது (3,174 டிராக்டர்கள் விற்கப்பட்டன); டிசம்பர், 2019ல் 1,538 டிராக்டர்கள் விற்பனைச் செய்யப்பட்டதுடன் ஒப்பிடும்போது டிசம்பர் 2020ல் 2,312 டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டு 50.32 சதவீதம் டிராக்டர் விற்பனை அதிகரித்துள்ளது; ஜனவரி, 2020ல் 2,635 டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டதுடன் உடன் ஒப்பிடுகையில் ஜனவரி, 2021ல் 3,900 டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டு 48 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்த குற்றப்பத்திரிகை கூறுகிறது.
மே மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த குற்றப்பத்திரிகையில், பல வீடியோ காட்சிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. விவசாயிகளின் தலைவர்கள் தங்கள் ஆதரவாளர்களை, போலீஸ் தடுப்புகளை உடைக்கும் வகையில் டிராக்டர்களை மாற்றி, ஹெவி மெட்டல் துணை பொருத்துவதற்கு தூண்டியதாக வீடியோ காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ காட்சிகள் அனைத்தும் குடியரசு தினத்திற்கு முன்பு பதிவு செய்யப்பட்டவை என்று கூறுகிறது.
விவசாய தலைவர்கள் டிராக்டர் பேரணியை அனுமதிக்கப்பட்ட வழியைப் பின்பற்றவில்லை என்று கூறும் வீடியோ காட்சிகளும் உள்ளன. அவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டால், அவர்கள் தடுப்பை உடைத்து டெல்லிக்குள்ளே நுழைவார்கள்” என்று இந்த குற்றப்பத்திரிகை கூறுகிறது.
போராட்டக்காரர்களின் நோக்கம் செங்கோட்டையை கைப்பற்றுவது. குடியரசு தினத்தில், நிஷான் சாஹிப் மற்றும் கிசான் கொடியை ஏற்றி, போராட்ட தளமாக மாற்றவும் இந்த நாட்டு மக்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவில் குழப்பத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்துவதுதான் நோக்கம் என்று குற்றப்பத்திரிகை கூறுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான இக்பால் சிங் வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டிய போலீசார், “அவர் நிஷான் சாஹிப் கொடியை ஏற்றுவதில் வெற்றி பெற்றால் … அவருக்கு இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பான சீக்கியர் ஃபார் ஜஸ்டிஸ் (SFJ) (நீதிக்கான சீக்கியர்கள்) குழுவால் அறிவிக்கப்பட்ட ரொக்கப் பரிசு வழங்கப்படும்” என்று கூறினார்.
இந்த குற்றப்பத்திரிகையில் இக்பால் சிங்கின் மகள் மற்றும் உறவினர் இடையேயான ஆடியோ உரையாடலை மேற்கோள் காட்டியுள்ளனர். அதில் அவர்கள் ரூ .50 லட்சம் கொடுப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி சிங் பஞ்சாபில் உள்ள டார்ன் தரனுக்கு வந்தார் என்று கூறிய இந்த குற்றப்பத்திரிகை, “நிஷான் சாஹிப் கொடியை செங்கோட்டையில் ஏற்றிவிட்டு தப்பியோடிய குற்றவாளிகளும் டார்ன் தரனில் இருந்து வந்தவர்கள்” என்று கூறுகிறது. அழைப்பு விவரம் பதிவுகளை மேற்கோள் காட்டி, சிங் “தனது கூட்டாளிகளில் ஒருவர் மூலம் தப்பியோடிய குற்றம் சாட்டப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தார்” என்று இந்த குற்றப்பத்திரிகை கூறுகிறது.
“குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் இல்லாமல் குற்றச்சாட்டுகள் தெளிவற்றதாக உள்ளன. ஏழை விவசாயிகள் செங்கோட்டையை கைப்பற்ற டிராக்டர்களை வாங்கினார்கள் என்பது அபத்தமான குற்றச்சாட்டு” என்று சிங்கின் வழக்கறிஞர் ஜஸ்டீப் தில்லன் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.
இந்த குற்றப்பத்திரிகையில் நடிகர் தீப் சித்து போராட்டக்காரர்களிடம் உரையாற்றிய வீடியோ காட்சியையும் “விவசாயிகள் சங்கத்தின் மற்ற தலைவர்கள் செங்கோட்டையை அடைந்து பொறுப்பேற்க அழைப்பு விடுத்தார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சித்துவின் வழக்கறிஞர், அபிஷேக் குப்தா, தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், “இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க போலீசார் எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை. சதித்திட்டத்தின் பேரில் விவசாயிகள் டிராக்டர்களை வாங்கினார்கள் என்ற இந்த குற்றச்சாட்டு அபத்தமானது, குழந்தைத்தனமானது. அவர்கள் சட்டத்தை கேலி செய்கிறார்கள்.” என்று சாடினார்.
கலவரம், அரசு ஊழியர்களைத் தாக்கியது, குற்றச் சதி, ஆயுதச் சட்டத்தின் பல பிரிவுகள், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிப்பதை தடுப்புச் சட்டம், பழங்கால நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் மற்றும் எச்சங்கள் தொடர்பான ஐபிசி பிரிவுகளின் கீழ் மற்றும் தொற்றுநோய் நோய் சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம் ஆகியவற்றில் மொத்தம் 16 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.