நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், 15-18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு நாளை முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இது தடுப்பூசி செலுத்தும் பிராசஸில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
சனிக்கழிமை இரவு 11.30 நிலவரப்படி, Cowin தளத்தில் இந்த வயதுடைய 3 லட்சத்து 15 ஆயிரத்து 416 பேர் தடுப்பூசிக்காக பதிவு செய்துள்ளனர்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தகுதியுடைய குழந்தைகளைப் பதிவு செய்யுமாறு பெற்றோருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். குழந்தைகள் பாதுகாப்பாக இருந்தால், நாட்டின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும் என தெரிவித்தார்.
அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின்படி, 15-18 வயதுக்குட்பட்ட 10 கோடி குழந்தைகள் தடுப்பூசிக்கு தகுதியுடையவர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி தகுதியான குழந்தைகளுக்கு 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ்களில் வழங்கப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது, நாட்டில் ஒமிக்ரான் தொற்று பரவ தொடங்கியதைடுத்து, அமலுக்கு வந்தது.
சனிக்கிழமை புள்ளிவிவரம்படி, இந்தியாவில் அன்று 22,775 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. நாட்டில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 4 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதேபோல், 1431 ஒமிக்ரான் பாதிப்புகளில் , 488 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 145.46 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக கோவின் தளம் தகவல்கள்தெரிவிக்கின்றன.
சிறார்களுக்கு தடுப்பூசிகள் செலுத்துவது தவிர, சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு ஜனவரி 10ஆம் தேதி முதல் முன் எச்சரிக்கை டோஸ் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் முன் எச்சரிக்கை டோஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil