18-44 வயதில் உள்ளவர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான முன் பதிவு கோ-வின் தளத்தில் நேற்று புதன்கிழமை அன்று ஆரம்பமானது. முதல் முடிவில், பதிவுகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1.33 கோடியைத் தொட்டுள்ளது. இந்த தடுப்பூசி இயக்கம் இளைஞர்களை உள்ளடக்கிய மிகப் பெரிய தடுப்பூசி இயக்கமாகும். இந்தியாவில் 18-44 வயதுக்குட்பட்டவர்களில் 59.46 கோடி மக்கள் உள்ளனர்.
ஒரு நாளைக்கு சராசரியாக 25-30 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ள நிலையில், முதல் நாளிலே சுமார் 1.33 கோடி பேர் பதிவு செய்திருப்பதால், வரும் வாரங்களில் அரசாங்கம் கடினமான பணிகளை எதிர்கொள்ள வேண்டி வரும்.
பல இளைஞர்கள் மற்றும் பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டு, விரைவிலே வேலைக்குச் செல்ல விரும்புவதால் அரசுக்கு பெரிய அழுத்தம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "மேலும், அதிக எண்ணிக்கையிலான தினசரி இறப்புகள் மக்களிடையே தடுப்பூசி பற்றிய தயக்கத்தை நீக்கிவிட்டன" என்று எய்ம்ஸில் ஒரு மருத்துவர் கூறினார், அவர் பெயர் குறிப்பிட விரும்பவில்லை.
60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மார்ச் 1 ஆம் தேதி கோ-வின் தளம் திறக்கப்பட்டபோது, 25 லட்சம் பயனாளிகள் முதல் நாளில் பதிவு செய்தனர். அதன்பிறகு, 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஏப்ரல் 1 ஆம் தேதி பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டபோது, கோ-வின் தளத்தில் பதிவு செய்யாமலே நிறைய பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்தனர்.
இதுவரை, கோ-வின் தளத்தில் 14.80 கோடி பதிவுகள் உள்ளன, அவற்றில் 2.91 கோடி மட்டுமே ஆன்லைனில் செய்யப்பட்டுள்ளன. 9.33 கோடி பேர் நேரடியாக தடுப்பூசி மையங்களுக்குச் சென்று பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மீதமுள்ள 2.55 கோடி பதிவுகள் சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள், அவர்களுக்கு முறையே ஜனவரி 16 மற்றும் பிப்ரவரி 1 முதல் தடுப்பூசிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டன.
மூன்றாம் கட்ட தடுப்பூசி இயக்கத்தில் பெரிய அளவிலான மக்கள் தொகைக்கு, தடுப்பூசி செலுத்த போதுமான தடுப்பூசிகள் இல்லை என பல மாநிலங்கள் புகார் தெரிவித்து வருகின்றன. பெரும்பாலான மாநிலங்களில் உள்ள நகரங்களில், 18-44 வயதுக்குட்பட்ட பயனர்கள், தடுப்பூசி மையங்களை கண்டறிவதில் சிக்கல் உள்ளதாக தெரிவிக்கின்றனர். ராஞ்சி போன்ற இடங்களில் மே முதல் இரண்டு வாரங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சிலர் தேதிகளை முன்பதிவு செய்துள்ளனர். இருப்பினும், குஜராத், சண்டிகர், டெல்லி, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, பீகார் மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் 45 வயதிற்குட்பட்டவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
“பதிவுகளை அனுமதிப்பது நல்லது என்று நாங்கள் உணர்வுபூர்வமாக முடிவு செய்தோம், ஏனென்றால் மாநிலங்கள் மற்றும் தனியார் துறை மருத்துவமனைகள் அவர்கள் காலியிடங்களை கோ-வின் தளத்தில் வெளியிடுவார்கள், அதனால் மக்கள் அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம்” என மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் கூறினார்.
சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவிடம் தலா 25 லட்சம் தடுப்பூசிகளை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் பாரத் பயோடெக் ஜூலை இறுதிக்குள் மட்டுமே தடுப்பூசிகளை வழங்க முடியும் என்று பதிலளித்துள்ளது. இதனால் தடுப்பூசி திட்டம் தோல்வியடையும் என்று அஞ்சிய அவர், “நாங்கள் ஒரு நாளைக்கு 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வல்லவர்கள். மத்திய அரசு எங்களுக்கு தடுப்பூசி கொடுக்கவில்லை என்றால், நாங்கள் எவ்வாறு செயல்பட முடியும்? எங்கள் திட்டத்துடன் நாங்கள் தயாராகவே இருக்கிறோம், மே 1 க்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு எங்களுக்குத் தெரிவித்தாலும் நாங்கள் திட்டத்தை தொடங்கலாம். ” என தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப், மாநிலத்திற்கு வாரத்திற்கு 40 லட்சம் தடுப்பூசிகள் தேவைப்படும் என கூறியுள்ளார். தற்போது மாநிலத்தில் சுமார் 7 லட்சம் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளது. மேலும், ஒரு நாளைக்கு 8 லட்சம் பேருக்கு நோய்த்தடுப்பு ஊசி போடும் திறன் மாநிலத்திற்கு இருந்தாலும், செவ்வாயன்று 1.5-2 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போட முடிந்தது எனவும் கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 20 லட்சம் டோஸ் வழங்க உத்தரவிட்டார். மேலும், அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், தமிழகத்திற்கு இதுவரை 67.85 லட்சம் டோஸ் கிடைத்துள்ளது. கோவிஷீல்ட்டின் 3 லட்சம் டோஸ் வியாழக்கிழமை வரும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், புதன்கிழமை வரை மாநிலத்தில் 5.6 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தான் இருப்பில் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் ரகு சர்மா கூறுகையில், “18-44 வயதிற்குட்பட்டவர்கள், மாநிலத்தில் 3.25 கோடி பேர் உள்ளனர். எங்களுக்கு சுமார் 7 கோடி அளவு தடுப்பூசி தேவை.” இந்நிலையில் 3.75 கோடி தடுப்பூசிகளுக்கு சீரம் நிறுவனத்திடம் அரசு ஆர்டர் கொடுத்துள்ளது, ஆனால் மே 15 வரை மத்திய அரசு வழங்கிய ஆர்டரை மட்டுமே நிறுவனம் நிறைவேற்றும் என்று கூறப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் தடுப்பூசிகளின் பற்றாக்குறை காரணமாக மே 1 முதல் தொடங்கப்படவுள்ள மூன்றாம் கட்டம் தாமதமாகலாம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். "தடுப்பூசிகளின் போதுமான அளவை வழங்க மத்திய அரசு தவறிவிட்டது. தற்போது, எங்களிடம் 1.23 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் மற்றும் 3.56 லட்சம் டோஸ் கோவாக்சின் உள்ளது. பற்றாக்குறை இருப்பதால், மூன்றாம் கட்ட தடுப்பூசி இயக்கம் தாமதமாகும் ”என்று மாநில பொது சுகாதார இயக்குனர் பிஜய் பனிகிராஹி கூறியுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளின் அச்சங்களை நீக்கி, இரண்டாவது டோஸ் தடுப்பூசி பெறுபவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் தேவையை பூர்த்தி செய்ய அரசு உதவும் என்று புதன்கிழமை கூறியுள்ளது. "பல்வேறு தனியார் துறை மருத்துவமனைகளில் முதல் டோஸ் தடுப்பூசிகளைப் பெற்ற சுமார் ஒரு லட்சம் பேர் தங்கள் இரண்டாவது டோஸ்க்காக காத்திருக்கிறார்கள் என்ற தகவல் மேற்கு வங்க அரசாங்கத்தின் கவனத்திற்கு வந்துள்ளது." மே 1 முதல் 18-45 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் கூடுதல் தெளிவுக்காக காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தடுப்பூசி உற்பத்தியாளர்களிடமிருந்து தெளிவான பதில் கிடைக்கவில்லை என்று மருத்துவமனைகள் தெரிவித்தன.
ஜார்க்கண்டின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 50 லட்சம் தடுப்பூசி மருந்துள் மாநிலத்திற்கு வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம், இருப்பினும், இது குறித்து எந்தவொரு தகவலையும் இதுவரை பெறவில்லை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.