கல்லூரியே கட்டாத ஜியோ: அரசு சலுகையை தொடர்ந்து வேந்தரையும் நியமனம் செய்தது!

ஜியோ பல்கலைக்கழகம் எப்படி இருக்கும்? எங்கு செயல்படும்? எத்தனை ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும்?

சிறப்பு தகுதியுடன் உருவாகும் ஜியோ பல்கலைக்கழகம்
ஜியோ பல்கலைக்கழகத்தின் வேந்தர்

இந்தியாவில் இருக்கும் தலைசிறந்த பத்து தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களின் பட்டியலில், இன்னும் அடிக்கல் கூட நாட்டப்படாத ஜியோ பல்கலைக்கழகத்தின் பெயரும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசின் இந்த மோசமான செயலை கண்டித்து பல்வேறு அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் எதிர்ப்பினையும் விமர்சனங்களையும் வைத்துள்ளன.

இந்நிலையில் தொடங்கப்படாத பல்கலைக்கழகத்திற்கு வேந்தர் மற்றும் துணை வேந்தர்களின் பெயரினை அறிவித்திருக்கிறது ஜியோ குழுமம்.

வேந்தர் மற்றும் துணை வேந்தர் நியமனம்

மூன்று வருடங்களுக்கு பின்னால் உதயமாக இருக்கும் இந்த ஜியோ பல்கலைக்கழகத்திற்கு  உலகத் தரம் வாய்ந்த இந்திய கல்வி நிறுவனங்களுக்கு தரும் சிறப்பு அந்தஸ்த்தினை  தந்துள்ளது மத்தியரசு.

தேசிய ஆராய்ச்சி மையத்தின் பேராரசியராக தேசிய ஜனநாயக் கூட்டணி அரசின் கீழ் 2016ம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஆர்.ஏ. மஷேல்கரை ஜியோ பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமித்திருக்கிறார்கள். அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் கீழ் இயங்கி வரும் நேசனல் இன்னொவேஷன் ஃபவுண்டேசனின் தலைவராக செயல்பட்டு வருகிறார் மஷேல்கர். இது தொடர்பாக அவரை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.

துணைவேந்தராக ரிலையன்ஸ் இன்னொவேஷன் கவுன்சில் இருந்த தீபக் சி. ஜெய்னை நியமித்திருக்கிறார்கள். இவர் பாங்காக்கில் இருந்த சாசின் கல்வி நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து.

சிறப்பு தகுதியைப் பெறும் ஜியோ பல்கலைக்கழகம் 

உலகத்தரம் வாய்ந்த இந்தியாவின் 20 கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து, அதன் படிநிலைகளை உயர்த்துதல் தொடர்பாக சிறப்பு தகுதியினை அறிவித்தது மத்திய அரசு.  இந்த பட்டியிலை தயாரிக்க எம்பவர்ட் எக்ஸ்பெர்ட் கமிட்டி  உருவாக்கப்பட்டது.

பெங்களூருவில் இருக்கும் இந்திய அறிவியல் கழகம், மும்பை இந்திய தொழில் நுட்பக் கழகம் , டெல்லி இந்திய தொழில் நுட்பக் கழகம் போன்ற அரசு கல்வி நிலையங்களும், பிட்ஸ் பிலானி, மணிப்பால் உயர்க்கல்வி அக்காடெமி, மற்றும் ஜியோ பல்கலைக்கழகம் போன்ற தனியார் நிறுவனங்களின் பெயர்களையும் வெளியிட்டார் கமிட்டித் தலைவர் கோபாலசாமி.

இதைப் பற்றி கேள்வி எழுப்பும் போது, ஜியோ அளித்த விண்ணப்பத்தில் இருக்கும் சில முக்கியத் திட்டங்கள் எங்கள் வரையறைக்குள் வந்த காரணத்தால் தான் இதன் பெயரை இணைத்துக் கொண்டோம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை பதில் கூறியது.

ஜியோ பல்கலைக்கழகத்தின் கற்பனை வடிவம்

மத்திய அமைச்சகத்திற்கு ஜியோ நிறுவனம் அளித்த திட்டத்தின் படி பார்த்தால், நவி மும்பை, கஜ்ரத் பகுதியில் மிக பிரம்மாண்டமாக 800 ஏக்கர் பரப்பளவில் அமைய இருக்கிறது இந்த பல்கலைக்கழகம்.

பத்து தனித்துறைகளின் கீழ் சுமார் 50 பாடப்பிரிவுகளை கற்றுத் தர இருக்கிறது.

அறிவியல், கலை, தொழில்நுட்பம், மருத்துவம், வடிவமைப்புத் துறை போன்ற பல்வேறு கல்விகளை கற்றுத் தருவதற்காக உலகில் இருக்கும் 500 உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து துறைசார் வல்லுநர்களை கொண்டு வர இருக்கிறது ஜியோ.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அனைத்துவிதமான வசதிகளையும் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே நிறுவ உள்ளது.

மேலும் வருகின்ற வருடங்களில், பல்கலைக்கழக கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கு சுமார் 9500 கோடி ரூபாய் செலவு செய்ய இருப்பதாகவும் அறிவித்திருக்கிறது ஜியோ.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Reliance pitched board member mashelkar as jio institutes chancellor

Next Story
இந்தியர்கள் இனவெறியர்களா? உண்மை என்ன?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com