Advertisment

'தாயகம் வந்தது அதிசயம்… சிக்கிக்கொண்ட பயத்தில் இருந்தோம்' சுமி மாணவர்களின் வேதனை குரல்

வெள்ளியன்று தாயகம் வந்த சுமார் 600 இந்திய மாணவர்கள், ரஷ்யா எல்லையில் இருந்து 60 கிமீ தொலைவில் உள்ள வடகிழக்கு உக்ரைன் நகரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் தஞ்சம் அடைந்திருந்தனர்.

author-image
WebDesk
New Update
'தாயகம் வந்தது அதிசயம்… சிக்கிக்கொண்ட பயத்தில் இருந்தோம்' சுமி மாணவர்களின் வேதனை குரல்

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு, 15 நாள்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனிலிருந்து மாணவர்களை மீட்க சென்ற மூன்று விமானங்களில், முதல் விமானம் 242 இந்தியர்களுடன் நேற்று அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தது.

Advertisment

அதில் வந்த, சுமி மாநில பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு பயிலும் மருத்துவ மாணவரான மோஹித் குமார் கூறுகையில், தாயகம் வந்தது அதிசயம். போரை, ஹாஸ்டல் ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டிருந்தது மிகவும் விசித்திரமானது. தொடர்ந்து ஷெல் தாக்குதல் நடைபெற்றது. ஒவ்வொரு 4-5 மணி நேரத்திற்குப் பிறகு சைரன்கள் அணைக்கப்பட்டன. ஜெட் விமானங்கள் வீழ்த்தப்படுவதை நாங்கள் பார்த்தோம் என்றார்.

வெள்ளியன்று தாயகம் வந்த சுமார் 600 இந்திய மாணவர்கள், ரஷ்யா எல்லையில் இருந்து 60 கிமீ தொலைவில் உள்ள வடகிழக்கு உக்ரைன் நகரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் தஞ்சம் அடைந்திருந்தனர்.

ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ், இந்த மாணவர்கள் மூன்று நாள் பயணத்தில் பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் போலந்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருக்கும் Rzeszow பகுதியிலிருந்து மாணவர்களை அழைத்து வர மத்திய அரசு ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் IAF விமானங்களை அனுப்பியிருந்தது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், சுமியில் இருந்து மாணவர்கள்இந்தியா திரும்புகிறார்கள். இந்த வெளியேற்றம் மிகவும் சவாலாக இருந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் கங்கா, தலைமை மற்றும் அர்ப்பணிப்பு ஆகிய இரண்டின் காரணமாக வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது என பதிவிட்டிருந்தார். டெல்லி விமான நிலையத்தில் மாணவர்களை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வரவேற்றார்.

ஹரியானாவின் ஹிசாரைச் சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவர் ஹர்தீப் ஷோகந்த் கூறுகையில், "பல நகரங்களில் மாணவர்கள் வெளியேற்றப்பட்டதை நாங்கள் கேள்விப்ப்டடோம். ஆனால், எங்களை வெளியேற்ற யாரும் வராமல், நாங்கள் மட்டும் சிக்கியிருந்தோம். மக்கள் மத்தியில் பயம் அதிகரித்தது. தூதரகத்தில் இருந்து வழிகாட்டுதல் வருவதற்கு முன்பே, ஒரு சிலர், ஹாஸ்டலில் இருந்து நடந்தாவது எல்லை பகுதியை அடைய முடிவு செய்தனர். இந்த வார தொடக்கத்தில், பேருந்துகள் வெளியேற்றத்திற்கு வந்தன. மாணவர்கள் அமர்ந்திருந்தபோது, ​​போர்நிறுத்தம் மீறப்பட்டதால், கடைசி நிமிடத்தில் திட்டங்களை மாற்ற வேண்டியிருந்தது. அந்த நேரத்தில், நாங்கள் இங்கு சிக்கித் தவிப்பது போல் உணர்ந்தோம்" என்றார்.

மூன்றாம் ஆண்டு மாணவி தேவன்ஷி ஸ்ரீவஸ்தவா கூறுகையில், " வெளியேற்றம் நாளில், எல்லாவற்றையும் பேக் செய்ய 2 மணிநேரம் மட்டுமே வழங்கப்பட்டது. 13 பேருந்துகள் வந்தன. அனைத்து மாணவர்களும் பொல்டாவாவுக்கு அழைத்துச் செல்ல பேருந்தில் ஏற்றப்பட்டனர். ஆனால், பேருந்துகளில் போதுமான இருக்கைகள் இல்லை. எனவே, சுமார் 12 மணிநேரம் எந்த இடைவெளியும் இல்லாமல் பயணம் முழுவதும் நிற்க வேண்டியிருந்தது.

publive-image

பொல்டாவாவிலிருந்து லிவிவ்க்கும், பின்னர் லிவிவ்லிருந்து போலந்துக்கும் இரண்டு ரயில்களில் சென்றோம். போலந்தில், தூதரக அதிகாரிகள் பழங்கள், ஜூஸ் மற்றும் குக்கீகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

இரண்டு மணி நேரம் ஓய்வெடுக்க ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். சுமி முதல் போலந்து வரை, தூதரக அதிகாரிகளால் உதவி கிடைக்கவில்லை. யாரும் உணவு கூட வழங்கவில்லை. ஆனால், போலந்து சென்றதும் தூதரகம் எங்களைக் கவனித்துக்கொண்டது. போலந்தில் எங்களுக்காக மூன்று விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அனைவரும் முதல் விமானத்தில் செல்ல விரும்புவதால் சிறு வாக்குவாதம் ஏற்பட்டது. இங்கு வந்து சேர நான்கு நாட்கள் ஆனது. உணவு பற்றாக்குறையால் தான், அங்கிருந்த நாள்கள் மிகவும் மோசமாகின. வேறு வழியின்றி, ஐஸ் கட்டிகளை கொதிக்க வைத்து, குடிநீராக பருகினோம். அரசாங்கம் எதுவும் செய்யவில்லை என்று மாணவர்கள் புகார் செய்யத் தொடங்கிய பிறகுதான் நாங்கள் வெளியேற்றப்பட்டோம்" என்றார்.

நான்காம் ஆண்டு மாணவி பிரேர்னா சவுத்ரி கூறுகையில், "சில நாட்களில் போர் நின்றுவிடும் என்ற நம்பிக்கையில் சிறிது உணவை மட்டுமே சேமித்து வைத்திருந்தோம். ஏடிஎம்களில் பணம் இல்லாததால் பணம் காலியானது. கடந்த வாரம் மின் உற்பத்தி நிலையம் தாக்கப்பட்டதால், குடிநீர் சப்ளை இரண்டு நாளும், மின்சாரம் ஒருநாளும் நிறுத்தப்பட்டது. உயிர்வாழ்வதற்கு பனி கட்டிகளை கொதிக்க வைக்க வேண்டியிருந்தது. பல்கலைக்கழகம், உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தண்ணீர் டேங்கர்கள் மற்றும் உணவுக்கு ஏற்பாடு செய்தன. இரண்டு வாரங்கள் கடந்தது. எங்களை பாதுகாப்பாக வெளியேற்றியதற்காக நாங்கள் அரசாங்கத்திற்கு நன்றி கூறுகிறோம்" என்றார்.

ஐந்தாம் ஆண்டு மருத்துவ மாணவர் சுபாஷ் யாதவ் கூறுகையில், நாங்கள் திரும்பி வருகையில் ரஷ்ய டேங்கர்கள் சுமி நகரத்திற்குள் செல்வதை பார்த்தோம். எங்கள் பல்கலைக்கழகத்திற்கு என்ன நடக்குமோ என்ற அச்சம் அங்குள்ள உள்ளூர் மக்களுக்கு உள்ளது. கார்கிவில் நடந்த அதே அழிவை அவர்களும் சந்திப்பார்களா தெரியவில்லை. நாங்கள் வெளியேறும் போது, உக்ரைன் மக்கள் அழுது கொண்டிருந்தனர், அவர்களுக்காக பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொண்டனர்" என்றார்.

ஏர்போர்ட்டில் பல மணி நேரம் காத்திருந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ukraine Russia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment