வீடியோ: இந்து கடவுள்களை அவமானப்படுத்தியதாக தலித் இளைஞரை சரமாரியாக தாக்கிய கும்பல்

உத்தரபிரதேச மாநிலம் முசாஃபர்நகரில், ’ஜெய் மாதா டி’ என முழக்கமிடுமாறு தலித் இளைஞரை, கும்பல் ஒன்று தாக்கிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் முசாஃபர்நகரில், ’ஜெய் மாதா டி’ என முழக்கமிடுமாறு தலித் இளைஞரை, கும்பல் ஒன்று தாக்கிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ஹெல்மெட் அணிந்த தலித் இளைஞர் ஒருவரை, மூன்று பேர் அடங்கிய கும்பல், அடித்தும், உதைத்தும் கொடூரமாக தாக்கியது. மேலும், ஒருவர் அச்சம்பவத்தை தனது செல்ஃபோனில் வீடியோ எடுத்துள்ளார்.

தன்னை தாக்குவதை நிறுத்துமாறு அந்த இளைஞர் கெஞ்சியும், “ஜெய் மாதா டி”, என முழக்கமிடுமாறு அவரை அக்கும்பல் கட்டாயப்படுத்தி தொடர்ந்து தாக்கியது. அந்த தலித் இளைஞர் இந்து கடவுள்களை அவமானப்படுத்தியதாக கூறி அக்கும்பல் தாக்கியதாக கூறப்படுகிறது.

அக்கும்பலில் ஒருவர், “நாங்கள் அம்பேத்கரை விமர்சிக்கிறோமா? ஆனால், நீங்கள் ஏன் எங்கள் கடவுள்களை விமர்சிக்கிறீர்கள்?”, என கூறுகிறார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவவே, இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலித் இளைஞரை தாக்கியவர்களை தேடி வருகின்றனர். அச்சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

×Close
×Close