சீக்கியர்களின் மத குருவான குருநானக்கின் 550-வது பிறந்த தினம் வருகிற 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. குருநானக் பிறந்த இடம் பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் என்ற பகுதியாகும். கர்தார்பூரில் சீக்கியர்களின் மிக பிரமாண்டமான வழிபாட்டு தலம் உள்ளது. ஆண்டு தோறும் சீக்கியர்கள் அங்கு சென்று குருநானக்கை வழிபட்டு வருகிறார்கள். அந்த வழிபாட்டு தலம் சர்வதேச எல்லையில் இருந்து பாகிஸ்தானுக்குள் 4 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. அந்த வழிபாட்டு தலத்தையும், இந்தியாவையும் இணைக்கும் வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
அந்த சாலை நாளை மறுநாள் திறக்கப்பட உள்ளது. இந்த சாலை வழியாக கர்தார்பூருக்கு வரும் ஒவ்வொரு இந்தியருக்கும் 20 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் 10 தினங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும் என்றும், உரிய ஆவணங்கள் எடுத்து வர வேண்டும் என்றும் பாகிஸ்தான் அறிவித்தது. அந்த நிபந்தனைகளை விலக்க இந்தியா வலியுறுத்தி வந்தது.
இதனை ஏற்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், கர்தார்பூருக்கு வரும் சீக்கியர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை, ஏதாவது ஒரு அடையாள அட்டை வைத்திருந்தால் போதும் என்று கூறியிருந்தார். மேலும், குருநானக்கின் பிறந்த நாளையொட்டி திறக்கப்படும் கர்தார்பூர் வழித்தடத்தில் வருபவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் கூறினார்.
ஆனால் இம்ரான்கானின் அறிவிப்பை ஏற்க பாகிஸ்தான் ராணுவம் மறுத்துள்ளது. கண்டிப்பாக இந்திய யாத்ரீகர்கள் பாஸ்போர்ட் கொண்டு வரவேண்டும் என ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக பாஸ்போர்ட் அவசியம் என்றும் அவர் கூறினார்.
இதுபற்றி இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "கர்தார்பூர் சாலை திறப்பு விழாவிற்கு முன்பாக, பாகிஸ்தான் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. பாகிஸ்தானிடம் இருந்து முரண்பட்ட தகவல்கள் வருகின்றன. சில நேரங்களில் பாஸ்போர்ட் தேவை என்று சொல்கிறார்கள், சில நேரங்களில் தேவையில்லை என்கிறார்கள்.
அவர்களின் வெளியுறவுத்துறை அலுவலகத்திற்கும், மற்ற அமைப்புகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக நினைக்கத் தோன்றுகிறது. பாகிஸ்தானுடன் நாம் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மாற்றப்படவில்லை.
தற்போதுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எந்தவொரு திருத்தமும் ஒருதலைப்பட்சமாக செய்ய முடியாது, அதற்கு இரு தரப்பு ஒப்புதலும் தேவை. எனவே, அந்த ஒப்பந்தத்தின்படி, கர்தார்பூர் சாலை வழியாகச் செல்வதற்கு பாஸ்போர்ட் தேவை" என்றார்.
இது ஒருபுறமிருக்க. குருத்வாராவிற்கு வருகை தரும் சீக்கிய யாத்ரீகர்களை வரவேற்கும் வகையில் பாகிஸ்தான் அரசு வெளியிட்ட வீடியோ பாடல் ஒரு சர்ச்சையை உருவாக்கி வெளியிட்டது. வீடியோ பாடலின் ஒரு பகுதியில் பின்னணியில பிந்ரன்வாலே உட்பட மூன்று காலிஸ்தானிய பிரிவினைவாதத் தலைவர்களின் படங்கள் இடம் பெற்றுள்ளன. 4 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் ”காலிஸ்தான் 2020” என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.
இந்த வீடியோவில், ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே, மேஜர் ஜெனரல் ஷான்பேக் சிங் மற்றும் அம்ரிக் சிங் கல்சா ஆகியோரின் சுவரொட்டிகள் உள்ளன. இவர்கள் அனைவரும் 1984 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமிர்தசரஸ் பொற்கோயிலில் இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் ப்ளூ ஸ்டாரின் போது கொல்லப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வீடியோவில் வரும் சர்ச்சைக்குரிய அந்த காட்சியையும், சுவரொட்டிகளையும் நீக்க பாகிஸ்தான் அரசை இந்தியா வலியுறுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.