கேரள அரசின் எதிர்ப்பை மீறி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பாலக்காட்டில் உள்ள பள்ளி ஒன்றில் தேசிய கொடியை ஏற்றினார்.
கேரளாவில் கடந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாடத்தின் போது, அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்துக் கொண்டு தேசிய கொடியை ஏற்றினார்.அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் அரசு பணியில் இருப்பவர் அல்லது பணியில் இருந்து ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் தான் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற சர்ச்சை ஏற்பட்டது.
இதன் காரணமாக, வரும் குடியரசு தினத்தன்று பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்கள் மட்டுமே தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று, கேரள அரசு அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தது. இந்நிலையில், மாநில அரசின் இந்த சுற்றறிக்கையை நிராகரித்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, திட்டமிட்டப்படி பாலக்காட்டில் உள்ள பள்ளி ஒன்றில் மோகன் பகவத் தேசிய கொடியை ஏற்றுவார் என்றும் அறிவித்திருந்தது.
இதனை அடுத்து, இன்று கேரளா மாநிலம், பாலக்காட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மாநில அரசின் எதிர்ப்பை மீறி மோகன் பகவத் தேசிய கொடியை ஏற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.