குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் கண்கவர் அணிவகுப்பு நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி 69-வது குடியரசு தின விழா வாழ்த்து கூறினார்.
குடியரசு தின விழா ஆங்கில ‘லைவ்’ பதிப்புக்கு இங்கே க்ளிக் செய்யவும்
குடியரசு தின விழா இன்று (ஜனவரி 26) இந்தியா முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 69-வது குடியரசு தினம் இது! இதையொட்டி டெல்லியில் ராஜபாதையில் கண்கவர் அணிவகுப்பு நடந்தது. முதல் முறையாக ஆசியக் கண்டத்தை சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர். விழாவின் LIVE UPDATES இங்கே..
காலை 10.45 : அணிவகுப்பில் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சார்பில் தனி ரதங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அந்தந்த மாநில கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அவை உள்ளன.
காலை 10.30: எல்லைப் பாதுகாப்புப் படையினர், இந்தோ-திபெத் பாதுகாப்புப் படையினர், என்.சி.சி. வீரர்கள் ஆகியோரும் அணி வகுப்பில் வருகிறார்கள்.
காலை 10.25 : ராணுவத்தின் பல்வேறு ரெஜிமென்ட்கள், முன்னாள் ராணுவத்தினர் அணிவகுப்பில் பங்கேற்கிறார்கள். கடற்படையினரின் அணிவகுப்பில் 144 இளம் மாலுமிகள் இடம் பெற்றிருக்கிறார்கள்.
காலை 10.10 : இந்திய ராணுவ பலத்தை நிரூபிக்கும் விதமாக ராஜபாதையில் குடியரசு தின அணிவகுப்பு அரங்கேறுகிறது. டி-9 பீஷ்மா டாங்கி, டி-72 டாங்கி, பிரமோஸ் ஏவுகணை அமைப்பு, ஆயுதங்களை கண்டறியும் ‘ஸ்வாதி’ ரேடார் உள்ளிட்டவை அணிவகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.
காலை 10.05 : விமானப்படை கமாண்டர் ஜோதி பிரகாஷ் நிராலாவுக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட எதிர் தாக்குதலில் தனி நபராக 3 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தியவர் இவர்!
காலை 9.52 : குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, ஆசிய நாடுகளின் 10 தலைவர்கள் ஆகியோர் மேடையில் அமர்ந்தனர். குடியரசுத் தலைவர் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினார். தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
காலை 9.43 : ஆசிய நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்றார்.
காலை 9.40 : குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 46 பாதுகாவலர்கள் புடைசூழ ராஜபாதைக்கு வந்தார். சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்கும் ஆசிய நாடுகளின் 10 தலைவர்கள், பிரதமர் மோடி ஆகியோருடன் அவர் மேடையில் அமர இருக்கிறார்.
காலை 9.22 : டெல்லி இந்தியா கேட் பகுதியில் அமர் ஜவான் ஜோதிக்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். அங்கு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செய்தார்.
காலை 8.13 : இந்திய குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் ஆசிய தலைவர்கள்: வியட்னாம் பிரதமர் குயென் சுவாங் பக், மியான்மர் ஸ்டேட் கவுன்சலர் ஆங் சாங் சூகி, தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிராயுத் சான் - ஓ-சா, மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், கம்போடியா பிரதமர் ஹன் சென், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ ரோ டட்டெர்டி, இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, லா பீப்பிள்ஸ் டெமாக்ரெடிக் ரிப்பப்ளிக் பிரதமர் டாக்டர் தொங்லவுன் சிசவுலித், புரூனே பிரதமர் தருசலாம் சுல்தான் ஹாஜி ஹஸ்ஸானல் போல்கியா முயிஸாடின் வதாதுல்லா
காலை 8.00: முதல் முறையாக ஆசிய கண்டத்தை சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்கள் இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொள்கிறார்கள். அந்த நாடுகளின் கொடிகளும் அணிவகுப்பில் இடம் பெறுகின்றன. ஆசிய கண்டத்தின் இதர நாடுகளுடன் இந்தியாவின் கலாச்சார உறவை பிரதிபலிக்கும் அம்சங்களும் அணிவகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.