12 ஆண்டுகள் குழந்தை தொழிலாளியாக இருந்த இளம்பெண் ஒருவர், தனது நம்பிக்கையால் உயர்ந்து வரும் 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் உரையாற்றும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் குடிசை வாழ் பகுதியை சேர்ந்தவர் கனகா (வயது 17). அவரது தந்தை உடல் நலக்குறைவு காரணமாக படுத்த படுக்கையாகிவிட்டார். தாய் வீடு ஒன்றில் பணியாளாக வேலை செய்து வருகிறார். அவருக்கு புற்றுநோய் ஏற்படும்போது, கனகா 4-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இத்தகைய குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியிலேயே கைவிடும் நிலைமை ஏற்பட்டது.
அதன்பின், நோய் முற்றி அவரது தாயாய் இறந்துபோனார். அவரது உறவினர்கள் கனகாவை வீட்டு வேலையில் அமர்த்தினர். குழந்தை தொழிலாளி என்ற வேதனையுடன் சேர்த்து உறவினர்களின் துன்புறுத்தல், சுரண்டல்களுக்கும் ஆளானார்.
ஒருநாள் கனகாவை திருமணம் ஒன்றிற்கு அழைத்து சென்றார்கள் உறவினர்கள். அங்கு வந்திருந்த என்.ஜி.ஓ. நிறுவனம் ஒன்று கனகாவை மீட்டனர்.
இப்போது கனகா 10-வது முடித்திருக்கிறார். மேற்கொண்டு படித்து பெரிய விஞ்ஞானியாக வேண்டும் என்பது அவரின் லட்சியம். வரும் நவம்பர் 20-ஆம் தேதி, உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் யுனிசெஃப் சார்பாக நடைபெறவிருக்கும் நிகழ்வில் உரையாற்றவிருக்கும் 30 குழந்தைகளில், கனகாவும் ஒருவர்.
இதுகுறித்து கனகா தெரிவிக்கும்போது, “குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க எவ்வளவோ சட்டங்கள் இருந்தாலும், அவை முறையாக செயல்படுத்தப்படவில்லை என்பதை நானே உணர்ந்திருக்கிறேன். இதனை நான் நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவேன். என்னைப்போன்று ஆயிரக்கணக்கான குழந்தைகள் பல சுரண்டல்களை எதிர்கொள்கின்றனர். நகரங்களில் உள்ள குழந்தைகள், அவர்களை காப்பாற்றிக்கொள்ள சிலரை அணுகவாவது முடியும். ஆனால், என்னை போன்று குடிசை பகுதிகள், கிராமங்களில் உள்ளவர்களும் இருக்கிறார்கள்.”, என கூறினார்.