சென்னை மற்றும் ஆந்திர பிரதேச ஐகோர்ட்டில் நீதிபதியாக பதவி விகித்தவர் நூட்டி ராம மோஹன் ராவ். மருமகளை கொடுமை செய்ததாக இவர் மீதும், இவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் மீதும் ஹைதராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து ஏப்ரல் 20, 2019 என்று தேதியிடப்பட்டு சிசிடிவி பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. இதனை ராவின் மருமகள் எம் சிந்து சர்மா வெளியிட்டு இருக்கிறார். ராம மோஹன் ராவ் ஏப்ரல் 2017ம் ஆண்டு பணி ஓய்வுப் பெற்றிருந்தார்.
2.20 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில், ராவின் மகன் என் வசிஷ்டா தனது வீட்டில் நடந்த வாக்குவாதத்தின் நடுவே மனைவி சிந்து மீது தாக்குதல் நடத்துவது தெரிகிறது. இந்த சண்டைக்கிடையே ராவும் அவரது மனைவி துர்கா ஜெயலட்சுமியும் தலையிட்டு சண்டையை நிறுத்த முயற்சிக்கின்றனர். வசிஷ்டா தனது மனைவி சிந்துவை குத்துவதையும், அறைவதையும் நம்மால் காண முடிகிறது. இதன்பிறகு, ராவ் மருமகளின் கைகளை இழுத்து சோபாவுக்குத் தள்ளுகிறார்.
வசிஷ்டாவின் குழந்தை அறைக்குள் நுழைந்து தனது தாயின் காலுக்கு இடையே வந்து நின்று கொள்கிறது. பின்னர் அவள் இழுக்கப்பட்டு அறைக்கு வெளியே அனுப்பப்படுகிறாள்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 27 ம் தேதி, சிந்து தனது கணவர் மற்றும் மாமியார் ஆகியோரஉடல் மற்றும் மன ரீதியில் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டி ஹைதராபாத் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
போலீஸ் விசாரணை
நீதிபதி (ஓய்வு பெற்ற) ராவ், வசிஷ்டா மற்றும் துர்கா லட்சுமி ஆகியோருக்கு எதிராக 498 ஏ, ஐபிசியின் 323 பிரிவுகள், டிபி சட்டத்தின் 4 மற்றும் 6 பிரிவுகளின் கீழ் புகார் அளித்ததாக சிந்து தந்தை எம் வி சர்மா தெரிவித்தார். "ஏப்ரல் 20 இரவு என் மகளைத் தாக்கிய பின்னர் காயங்கள் ஏற்பட்டன, அவர்களே என் மகளை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அவள் முதுகு, மார்பு மற்றும் கைகளில் வெட்டுக்கள் மற்றும் சிராய்ப்புகள் உள்ளன. எனது மகள் மனநலம் குன்றியவள் என்று சித்தரிக்க முயன்றார்கள், காயங்களை அவளே தானே ஏற்படுத்திக் கொண்டதாக சித்தரிக்க முயற்சிக்கிறார்கள்," என்றார்.
இவ்விவகாரம் குறித்து, டி.சி.பி அவினாஷ் மொஹந்தி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், "புகார் அளித்தவர் சி.சி.டி.வி காட்சிகளை தருவதாக உறுதியளித்திருந்தார், ஆனால் அதை இதுவரை சமர்ப்பிக்கவில்லை. சிந்து சர்மா சார்பாக நாங்கள் புகாரை பதிவு செய்தபோது, அவரும் அவரது குடும்பத்தினரும் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் வீடியோக்களை வழங்குவதன் மூலம் விசாரணைக்கு உதவுவதாகக் கூறினர். நாங்கள் ஏற்கனவே வசிஷ்டாவின் அறிக்கையை எடுத்துக் கொண்டோம்"
"ஏப்ரல் முதல் பல முறை கேட்டும், சிந்து தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் வீடியோவை ஒருபோதும் சமர்ப்பிக்கவில்லை. அவர் புகார் அளித்த பின்னர், தம்பதியினர் தங்கள் குழந்தைகளின் பொருட்டு சமரசம் செய்ய முடியுமா என்று ஆலோசனைக்கு அழைக்கப்பட்டனர். பேச்சுவார்த்தைகளும், சமரசமும் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நாங்கள் எந்த தீர்வையும் காணவில்லை, இதற்கிடையில், சிந்துவின் குடும்பத்தினர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். நாங்கள் அதை ஆராய்ந்து நடவடிக்கைகளைத் தொடங்குவோம்." என்றார்.
சிந்துவின் உறவினர் ஒருவர் கூறுகையில், "சிந்து மீதான தாக்குதலைத் தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதியும் அவரது மனைவியும் எதுவும் செய்யவில்லை என்பதை வீடியோ தெளிவாகக் காட்டுகிறது.” என்றார்.
சிந்துவின் தந்தை கூறுகையில், "எனது மகள் மீது அவரது மனைவி துர்கா லட்சுமியுடன் நடந்த தாக்குதலில் நீதிபதியும் துணை நின்றார். கூடுதல் வரதட்சணை பெற அவர்கள் பல ஆண்டுகளாக அவளைத் துன்புறுத்திக் கொண்டிருந்தார்கள், ஆனால் அவள் மறுத்துவிட்டாள், அதனால் அவள் கொடுமைப்படுத்தப்படுகிறாள். சிந்துவின் கணவரான வசிஷ்டாவை தொடங்கும் கட்டுமானத் தொழிலுக்காக அவர்கள் அதிக பணம் கோருகின்றனர்" என்றார்.