புதுச்சேரியில், மருத்துவமனை நோயாளி கவனிப்பு படி வழங்காததை கண்டித்து ஓய்வு பெற்ற சுகாதாரத் துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி சுகாதாரத் துறையில் பணிபுரிந்த ஊழியர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கடந்த 2 ஆண்டுகளில் பணி ஓய்வு பெற்றனர். இவர்களுக்கு பணியின் போது வழங்கப்பட வேண்டிய மருத்துவமனை நோயாளி கவனிப்பு படி வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர்.
இதனை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். எனினும், இவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு மருத்துவமனை நோயாளி கவனிப்பு படியை உடனடியாக வழங்க வேண்டும் என்று கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு ஆணையிட்டது.
ஆனால், இதனை புதுச்சேரி அரசு நடைமுறைப்படுத்தவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அரசு மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவு அருகே, யாசகம் பெறும் போராட்டத்தில் ஓய்வுபெற்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதி சற்று பரபரப்பாக காணப்பட்டது.