2013 முதல் 2017 வரை மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவை வெளியிடுங்கள் : மத்திய அரசுக்கு, தகவல் ஆணையம் உத்தரவு

இந்திய கப்பற் படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் அதிகாரி கமோடர் லோகேஷ் பட்ரா இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் இது குறித்த தகவல்களை கேட்டிருந்தார்.

ஆர். சந்திரன்

நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேறற்றுக் கொண்ட 2013 முதல் 2017 வரையான காலத்தில் அவர் மேற்கொண்ட ஏர் இந்தியா தனி விமான வெளிநாட்டுப் பயணத்துக்கு இதுவரை, எவ்வளவு செலவாகியுள்ளது என்பதை வெளியிட வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சகம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஆர் கே மாத்தூர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்திய கப்பற் படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் அதிகாரி கமோடர் லோகேஷ் பட்ரா இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் இது குறித்த தகவல்களை கேட்டிருந்தார். அவருக்கு முழுமையான தகவல்கள் தரப்படாமல், அரைகுறையான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. அதோடு, இது பல்வேறு துறை அலுவலகங்களில் உள்ள ஏராளமான கோப்புகளில் இருந்து, பல்வேறு அதிகாரிகளால் திரட்டப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டதாக தெரிகிறது. அதனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, நாட்டின் மிக உயர்ந்த அதிகாரம் படைத்த அமைப்பான மத்திய தகவல் ஆணையத்தில் லோகேஷ் பட்ரா மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த விசாரணையில் மீண்டும் மத்திய வெளியுறவுத்துறை சார்பில் ஆஜரானவர்கள், பட்ரா கேட்கும் தகவல்கள் பல்வேறு இடங்களில், கோப்புகளில், துறைகளில் சிதறிக் கிடப்பதாகவும், அவை ஓரிடத்தில் இருந்து பெறுவது போன்ற எளிதான காரியம் இல்லை என்பதாகவும் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால், இந்த விளக்கத்தை ஏற்க தலைமை தகவல் ஆணையர் மறுத்துவிட்டார். கமோடர் லோகேஷ் பட்ரா கேட்கும் தகவல்களை அவருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின்போது பட்ரா தரப்பிலும் வலுவான வாதங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, எர் இந்தியா தற்போது நஷ்டத்தில் இயங்கிக் கொள்ள ஒரு அரசு பொதுத்துறை நிறுவனம். எனவே, அது யாருக்கு தனி விமானம் வழங்க முன் வந்தாலும், அதற்கான செலவு உள்ளிட்டவை கடனாக பெறப்படும் நிலையில், அதற்கு வட்டி கட்ட வேண்டும். அதுவும் சேர்ந்துதான் அப்பாவி இந்தியனின் தலையில் விழப் போகிறது. பாதுககாப்புக் காரணங்களைச் சொல்லி, முடிந்து போன இந்த சம்பவங்களின் செலவுகள் குறித்த தகவலைத் தர மறுப்பது ஏற்க இயலாது. எனவே, இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த தகவலை அறிய உரிமை கொண்டவர்கள். இதை வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட மத்திய தகவல் ஆணையம், இப்போது மத்திய வெளியுறவுத்துறைக்கு, தகவல்களை திரட்டி, கேட்டுப் பெற்று பகிர்ந்து கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளது.

×Close
×Close