பாலியல் தொழில் உள்ளிட்ட பல்வேறு ஆதாயங்களுக்காக ஆண், பெண் இருபாலரும் கடத்தப்படும் சம்பவங்கள் மேற்கு வங்க மாநிலத்திலேயே அதிகம் நடைபெறுவதாக, தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்.சி.ஆர்.பி.) சமீபத்தில் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரியவந்துள்ளது.
என்.சி.ஆர்.பி. வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டில் மொத்தம் 8,132 கடத்தல் சம்பவம் குறித்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் அதிகபட்சமாக 3,597 வழக்குகள் மேற்கு வங்க மாநிலத்திலும், 1,422 வழக்குகள் ராஜஸ்தான் மாநிலத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், கடத்தப்பட்டவர்கள் காவல் துறையினரால் மீட்கப்பட்ட சம்பவங்களில் முதலிடத்தை ராஜஸ்தான் (5767), மாநிலமும், இரண்டாவது இடத்தை மத்தியபிரதேச மாநிலமும் (4817), மூன்றாவது இடத்தை மேற்கு வங்க (2,793) மாநிலமும் பிடித்துள்ளன. இவ்வாறு மீட்கப்பட்டவர்களுள், 2,323 பேர் பெண்கள் மற்றும் 470 பேர் ஆண்கள் ஆவர். அதேபோல், பாலியல் தொழிலுக்காக கடத்தல் சம்பவங்களில் கைதானோரின் எண்ணிக்கை அதிகபட்சமாக (1,847) மேற்கு வங்கத்தில் நடைபெற்றுள்ளன. இதில், 1,795 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், கடந்த 2016-ஆம் ஆண்டில் வெறும் 11 பேர் மீது மட்டுமே குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளன. 224 வழக்குகளில் சில தள்ளுபடி செய்யப்பட்டன அல்லது கைதானவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
“கிராமப்புறங்களில் நடைபெறும் கடத்தல் சம்பவங்களை அரசும், என்.ஜி.ஓ.க்களும் கண்டுகொள்ளவில்லை. நாட்டிலேயே அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 44% கடத்தல் சம்பவங்கள் நடைபெறுகிறது என்பது கவலைக்கிடமானது. இவை வெறும் வழக்காக பதிவு செய்யப்பட்டவையின் எண்ணிக்கைதான்.”, என்கிறார் இதுதொடர்பாக பணிபுரியும் என்.ஜி.ஓ. அமைப்பை சேர்ந்த ரிஷி காந்த்.
கிராமப்புறங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் இத்தகைய சம்பவங்களில் அதிகம் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.