சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகள் கூறினர். இதையடுத்து இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டது. இடைக்கால சி.பி.ஐ. இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.
இதை எதிர்த்து அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில், மீண்டும் அவரை பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்க, மீண்டும் சி.பி.ஐ. இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஆனால், அலோக் வர்மா மீதான ஊழல் புகாரில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து பிரதமர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மா நீக்கப்பட்டு, தீயணைப்புத்துறை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டார்.
புதிய பதவியை ஏற்க மறுத்த அலோக் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால், இடைக்கால சி.பி.ஐ. இயக்குனராக நாகேஷ்வர ராவ் மீண்டும் நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையே, சி.பி.ஐ. துறைக்கு நிரந்தரமாக இரு இயக்குனரை மத்திய அரசு இன்னும் நியமிக்காதது ஏன்? என உச்சநீதிமன்றம் நேற்று கேள்வி எழுப்பியது.
இந்நிலையில், சிபிஐ அமைப்பின் புதிய இயக்குனராக ரிஷிகுமார் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேச மாநில டிஜிபியாக பணியாற்றிய ரிஷிகுமார் சுக்லா, தற்போது சிபிஐயின் புதிய இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், 1983 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.