/tamil-ie/media/media_files/uploads/2022/10/rishi-1.jpg)
பிரிட்டன் பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் பதவி விலகியதையடுத்து புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பதவியேற்றார். பிரிட்டன் வரலாற்றில் முதல் முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் பிரதமராகிறார். ரிஷிக்கு இந்தியாவில் பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதேவேளையில் இது தொடர்பாக ஆளும் பா.ஜ.க மற்றும் எதிர்க்கட்சிகளிடையே வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பெரும்பான்மைவாதம் மற்றும் பிரிவினைவாதம் நிலவுவதை முன்வைத்து எதிர்க்கட்சிகள் பா.ஜ.க-வை சாடி வருகிறது. பதிலுக்கு பா.ஜ.க ஏ.பி.ஜே அப்துல் கலாம் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரை மேற்கோள் காட்டி பதிலடி கொடுத்துள்ளது.
சுனக்கின் வெற்றியையும், சோனியா காந்திக்கு கட்சி எதிர்ப்பு தெரிவித்ததையும் ஒப்பீடு செய்ய கூடாது என பா.ஜ.க கூறியுள்ளது. 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முயன்றபோது, சோனியா காந்தி பிரதமராவதற்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சோனியா காந்தி இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதைக் கூறி எதிர்ப்பு தெரிவித்தது.
இது குறித்து பா.ஜ.கவின் வெளியுறவுத் துறைத் தலைவர் விஜய் சௌதைவாலே தனது ட்விட்டரில் கூறுகையில், "இந்திய வம்சாவளியைக் கொண்டு இங்கிலாந்தில் பிறந்த ரிஷி மற்றும் இத்தாலியில் பிறந்த சோனியாவையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டும். சோனியா (ராஜீவ்வுடனான திருமணத்திற்குப் பிறகு பல ஆண்டுகள் இந்திய குடியுரிமை பெற மறுத்தார்)" எனக் கூறியுள்ளார்.
பி.டி.பி கட்சி தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி மற்றும் திரிணாமுல் எம்.பி மொஹுவா மொய்த்ரா ஆகியோரும் பா.ஜ.வை கடுமையான விமர்சனம் செய்தனர். முப்தி கூறுகையில், "இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் முதல்முறையான பிரிட்டன் பிரதமாரானது பெருமையான தருணம். இங்கிலாந்து, சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக ஏற்றுக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இங்கு மறுபுறம், என்.ஆர்.சி மற்றும் சி.ஏ.ஏ போன்ற பிளவுபடுத்தும் மற்றும் பாரபட்சமான சட்டங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளோம்" என்று கூறியுள்ளார்.
இதற்கு பா.ஜ.க தலைவர் மற்றும் முன்னாள் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்துள்ளார். அதில், ஜம்மு காஷ்மீர் முதல்வராக ஒரு சிறுபான்மையினரை ஏற்றுக் கொள்வீர்களா? என மெகபூபாவிடம் கேட்டார்.
பா.ஜ.க தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் அமித் மால்வியா கூறுகையில், "இந்தியாவில் மூன்று முஸ்லிம், ஒரு சீக்கியர் ஜனாதிபதியாக இருந்துள்ளனர். இந்தியாவில் 10 ஆண்டுகளாக ஒரு சீக்கிய பிரதமர் மற்றும் சிறுபான்மையினர் நீதித்துறை மற்றும் ஆயுதப்படைகளில் உள்ளனர்.
இந்தியா வேறு எந்த நாட்டிடமிருந்தும் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம் பற்றி கற்றுக்கொள்ள வேண்டியதில்லை. ஜம்மு காஷ்மீர் முதல்வர் பதவிக்கு மெகபூபா ஒரு இந்துவை ஆதரிக்க வேண்டும்" என்று ட்விட்டர் பதிவிட்டார்.
இதேபோல், காங்கிரஸின் ப. சிதம்பரம் மற்றும் சசி தரூர் பா.ஜ.க -வை சாடியுள்ளனர். ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், முதலில் கமலா ஹாரிஸ், இப்போது ரிஷி சுனக். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மக்கள் தங்கள் நாடுகளில் பெரும்பான்மை இல்லாத குடிமக்களை ஆதரித்து உயர் பதவிக்கு தேர்ந்தெடுத்துள்ளனர். இந்தநிலையில், இதிலிருந்து இந்தியாவும் பெரும்பான்மைவாதத்தை கடைபிடிக்கும் கட்சிகளும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் உள்ளது என்று பதிவிட்டார்.
சசி தரூர் கூறுகையில், "சிறுபான்மையினரைச் சேர்ந்த ஒருவரை உயர் பதவியில் அமர்த்தி பிரிட்டன் மிகவும் அரிதான ஒன்றைச் செய்துள்ளது. இதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். இந்தியர்களான நாம் ரிஷியின் வெற்றியைக் கொண்டாடும் அதேவேளையில் நாம் நேர்மையாக ஒன்றைக் கேட்போம்: இதுபோன்று இங்கே நடக்குமா?" என்று கூறியுள்ளார்.
உடனடியாக இதற்கு பா.ஜ.க தலைவர்கள் பதிலளித்தனர். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில்
சீக்கியரான மன்மோகன் சிங் 2 முறை பிரதமராக இருந்தார். சிதம்பரம் மற்றும் தரூர் சிங்-யை ஒரு "தலைவராக" கருதவில்லையா?. ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், "ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு சில தலைவர்கள் பெரும்பான்மைவாதத்திற்கு எதிராக தீவிரமாக பேசி வருகின்றனர். அவர்களுக்கு, பிரதமராக மன்மோகன் சிங்-கின் 10 ஆண்டுகால ஆட்சி மற்றும் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் சிறப்பான குடியரசுத் தன்மையை நான் நினைவூட்டுகிறேன். இப்போது, பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு ஜனாதிபதியாக உள்ளார்" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.