இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா. பா.ஜ.க. தலைவரான இவர் குஜராத் ஜாம்நகர் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில், ரிவாபா ஜடேஜா ஜாம்நகர் நகர மேயர் பினா கோத்தாரி மற்றும் எம்.பி. பூனாம்பென் மேடம் உடன் கருத்து மோதலில் ஈடுபட்ட சம்பவம் பா.ஜ.க அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜாம்நகர் முனிசிபல் கார்ப்பரேஷன் (ஜேஎம்சி) ‘மேரா தேஷ், மெரி மிட்டி’ நிகழ்ச்சியை நேற்று வியாழக்கிழமை காலை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு உள்ளூர் சங்கத்தால் கட்டப்பட்ட தியாகிகள் நினைவிடம் திறக்கப்பட்டது.
ஜாம்நகரின் இரண்டு முறை எம்.பி.யாக இருந்த பூனாம்பென் மேடம், புதிதாக திறக்கப்பட்ட நினைவிடத்தில் தியாகிகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து ஜாம்நகர் வடக்கு எம்.எல்.ஏ-வான ரிவாபாவும், மேயர் பினா கோத்தாரியும் வந்தனர். விழா நடந்து கொண்டிருந்த போது, தியாகிகள் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தும் முன் தனது காலணிகளை கழற்றியபோது, எம்.பி., பூனாம்பென் மேடம் ரிவாபா ஜடேஜா பற்றி எதிர்மறையான கருத்தை தெரிவித்ததாக குற்றம்சாட்டி, அவருடன் ரிவாபா வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது எம்.பி. பூனாம்பென் மேடம் ரிவாபா ஜடேஜாவிடம், "ஓவர் ஸ்மார்ட்" என்று கூறியுள்ளார்.
ரிவாபா ஜடேஜா பின்னர் ஊடகவியலாளர்களிடம் கூறுகையில், எம்.பி. பூனாம்பென் மேடம் காலணிகளை அணிந்து மரியாதை செலுத்திய பிறகு, தியாகிகளுக்கு "கூடுதல் மரியாதை" அளிக்கும் விதமாக காலணிகளை கழற்றி தான் அஞ்சலி செலுத்தியதாக கூறினார். "எம்.பி முதலில் அஞ்சலி செலுத்தினார், அவர் தனது காலணிகளை அணிந்தபடி அதைச் செய்தார். பிறகு என் முறை வந்தது. இயற்கையாகவே தியாகிகள் மீது நமக்கு மரியாதை உண்டு, இந்த நேரத்தில், சில கூடுதல் மரியாதைகள் தேவை. ஏனென்றால், நமது உண்மையான மாவீரர்களை நினைவுகூரும் தருணம் இது என்று நமது மாண்புமிகு பிரதமரும் கூறியிருக்கிறார். எனவே, எனது காலணிகளை அகற்றி அஞ்சலி செலுத்தினேன்.
பின்னர், ஜே.எம்.சி மற்றும் கட்சி நிர்வாகிகளும் தங்களது காலணிகளை அகற்றி அஞ்சலி செலுத்தினர். எனவே, இது கூடுதல் மரியாதை செலுத்தும் முயற்சி. நிகழ்ச்சியின் போது மாநகராட்சி அதிகாரிகளின் பார்த்தவாறு, நாங்கள் நின்றிருந்தபோது, எனது பக்கத்தில் எம்.பி. மேடம், மேயர் கோத்தாரி ஆகியோர் நின்றனர். பா.ஜ.க பரிவாரத்தை சேர்ந்த அவர்கள் 'இதுபோன்ற நிகழ்வுகளில் பிரதமரும் குடியரசுத் தலைவரும் கூட தங்கள் காலணிகளை அகற்றுவதில்லை.
ஆனால் ஒன்றும் தெரியாத சில புத்தியில்லாத மனிதர்கள் காலணிகளை அகற்றுவதன் மூலம் அதீத புத்திசாலித்தனமாக இருக்க முயற்சி செய்கிறார்கள் என உரக்கச் சொன்னார்கள். எனது சுயமரியாதையைப் பற்றியது மற்றும் அவரது கருத்து பொருத்தமானதாகத் தெரியவில்லை என்பதால், நான் எதிர்வினையாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என நினைத்தேன்." என்று அவர் கூறினார்.
இது தொடர்பாக கேட்க மேயர் கோத்தாரியை தொடர்பு கொண்டபோது, "இது குடும்ப விவகாரம்" என்று மட்டும் கூறினார். இதேபோல், எம்.பி. பூனாம்பென் மேடமும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
இந்த சம்பவம் குறித்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் அரசியல்வாதி ஒருவர் பேசுகையில், ரிவாபா ஜடேஜா கோபமடைந்தபோது, எம்.பி பூனாம்பென் மேடம் மேயர் கோத்தாரி உடன் பேசிக்கொண்டிருந்தார். “ரிவாபா ஜடேஜாவைப் பின்பற்ற கோத்தாரி தனது காலணிகளை கழற்ற சிரமப்படுவதை எம்.பி பூனாம்பென் மேடம் உணர்ந்தார். எனவே, பிரதமரும் ஜனாதிபதியும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தங்கள் காலணிகளை அகற்றுவதில்லை, மேலும் ஆயுதப்படைகளின் அதிகாரிகளும் முழு சீருடையில் நினைவுச்சின்னங்களில் மலர்வளையம் வைப்பதால், தனது காலணிகளுடன் அஞ்சலி செலுத்தினால் பரவாயில்லை என்று மேயர் கோத்தாரியிடம் கூறினார்.
ஆனால் ரிவாபா ஜடேஜா, மேடமின் கருத்துகள் தன்னைக் குறிப்பிட்டதாக உணர்ந்து, அவர் கோபமடைந்தார். ரிவாபா ஜடேஜா வாக்குவாதத்தை எழுப்பியபோது, எம்.பி பூனாம்பென் மேடம் தன்னிடம் பேசவில்லை, மேயர் கோத்தாரியிடம் பேசுவதாக கூறினார். இப்படித்தான் மேயரும் வாதத்தில் இழுக்கப்பட்டார்” என்றார்.
தற்செயலாக, கடந்த ஆண்டு ஜாம்நகர் வடக்கு தொகுதியில் ரிவாபா ஜடேஜாவின் தேர்தல் பிரச்சாரத்தின் போது உடன் சென்ற இரண்டு பா.ஜ.க தலைவர்களில் மேயர் கோத்தாரியும் ஒருவர்.
ஜாம்நகரைச் சேர்ந்த மூத்த பாஜக நிர்வாகி ஒருவர் பேசுகையில், “இது ரிவாபா ஜடேஜாவின் முதிர்ச்சியற்ற தன்மையையும் ஈகோவையும் காட்டுகிறது. இப்படி நடப்பது இது முதல் முறையல்ல. அவர் எம்.எல்.ஏ ஆகி எட்டு மாதங்கள் கூட ஆகவில்லை, குறைந்தது மூன்று சம்பவங்களில் அவர் ஈடுபட்டுள்ளார். பொதுவெளியில் இதுபோன்ற செயலில் ஈடுபடுவதை அவர் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்." என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.