ஜெயந்த் சௌத்ரியின் கடிதம், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஒரு நாள் முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது. இது சமாஜ்வாடி கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் பற்றிய செய்திகளுக்கு மத்தியில் வந்துள்ளது.
ஆர்.எல்.டி தலைவர் ஜெயந்த் சவுத்ரி பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட குடும்ப நிகழ்ச்சி காரணமாக பீகாரின் பாட்னாவில் வெள்ளிக்கிழமை நடைபெறும் எதிர்க்கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடியாது” என்று தெரிவித்தார்.
சௌத்ரி தலைமையிலான ராஷ்டிரிய லோக் தளம் சமாஜ்வாடி கட்சியின் கூட்டணி கட்சியாக இருந்தாலும், சமீபத்திய உ.பி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இடங்கள் பங்கீடு தொடர்பான கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் இரு கட்சிகளுக்கும் இடையேயான இடைவெளி கடந்த சில மாதங்களாக தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும், இரு கூட்டணி கட்சிகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்பட்டுவிட்டதாக ஆர்.எல்.டி தலைவர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
ஜெயந்த் சவுத்ரியைத் தவிர, எதிர்க்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிக்கும் மற்றொரு பெரிய தலைவர் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆவார். அவரை ஐக்கிய ஜனதா தளம் கட்சி அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சௌத்ரி தனது கடிதத்தில், “சர்வாதிகார மற்றும் வகுப்புவாத சக்திகள் ஜனநாயகம் மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், ஒத்த எண்ணம் கொண்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது காலத்தின் தேவை” என்று கூறியுள்ளார்.
“நாட்டின் பிரச்சனைகள் மற்றும் சவால்கள் குறித்த விவாதங்களை நடத்திய பிறகு, எதிர்க்கட்சிகள் தொலைநோக்கு மற்றும் நடைமுறை அணுகுமுறையை மக்கள் முன் வைக்க முடியும். நாம் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் நலிந்த பிரிவினரின் நம்பிக்கையை வென்று நாட்டில் நல்ல மாற்றத்தை கொண்டு வர முடியும்” என்று அவர் ஜூன் 12-ம் தேதியிட்ட கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஆர்.எல்.டி வெளியிட்ட கடிதத்தில் சவுத்ரி, “எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு இந்த சந்திப்பு ஒரு முக்கியமான படியாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார். “உங்கள் குறிக்கோளில் வெற்றிபெற உங்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்.” என்று கூறினார்.
வெள்ளிக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் சவுத்ரி பங்கேற்க முடியாது என்றாலும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமாரின் முயற்சியை அவர் ஆதரிப்பதாக ஆர்.எல்.டி மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். “ஜெயந்த் ஜி தனது குடும்பத்தினருடன் ஜூன் 16-ம் தேதி வெளிநாட்டிற்கு விமானத்தில் செல்வதற்கு முன்கூட்டியே முடிவு செய்திருந்தார். அவருடைய உறவினர்கள் சிலர் அங்கு வசிக்கிறார்கள். மேலும் இந்த நிகழ்ச்சி முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது” என்று அர்.எல்.டி தலைவர் கூறியுள்ளார்.
“ஆனால், அவர் நிதிஷ் குமாரையும் எதிர்க்கட்சியில் ஒன்றாக இணைவதற்கான அவரது முயற்சிகளையும் ஆதரிக்கிறார். அவர் நாட்டில் இருந்திருந்தால் வெள்ளிக் கிழமை கூட்டத்திற்கு கண்டிப்பாக சென்றிருப்பார்” என்றார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.