இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று கடந்த மே மாதத்துடன் 8 ஆண்டுகள் நிறைவுற்றன. இதை பாஜக மனநிறைவுடன் கொண்டாடியது. வரும் தேர்தலில் 350க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற அப்போதே இலக்கை தீர்மானித்தது.
ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது என்றே தோன்றுகிறது. கட்சியின் பாராளுமன்ற குழு சீரமைப்பு, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேற்றம் என பாஜகவுக்கு அங்காங்கே சில முட்டுக்கட்டைகள் போடப்பட்டுள்ளன.
இதற்கிடையில் பாரதிய ஜனதா தலைவர்கள் சிலர், கட்சியின் பாராளுமன்ற குழு சீரமைக்கப்பட்டது அவசரமான நடவடிக்கை எனக் கூறுகின்றனர். கடந்த காலங்களில் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் அதில் இருந்தனர். ஆனால் தற்போது தேர்தலை கவனத்தில் கொண்டு தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதுபோல் தெரிகிறது எனக் கூறுகின்றனர்.
தேசிய அளவில் முக்கியத்துவம் பெறாவிட்டாலும், தென்னகத்தில் வலுவாக காலூன்ற லிங்காயத்துக்கள் சமூக வாக்குகள் தேவை. இதற்காக 79 வயதான பி.எஸ். எடியூரப்பாவுக்கு தேசிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது பற்றி பாஜக தலைவர் ஒருவர் கூறுகையில், “2024இல் கர்நாடகாவில் கட்சி குறித்து பெரிதளவு நம்பிக்கை இல்லை. ஆகையால், எடியூரப்பாவின் முழு மனதுடன் கூடிய ஆதரவை எதிர்நோக்குகின்றனர்” என்றார்.
மேலும் பஞ்சாப் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் வலுவான காலூன்ற இக்பால் சிங் லால்புரா மற்றும் பட்டியலின தலைவரான சத்ய நாராயண ஜாதியாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இழந்த ஆட்சியை ஷிண்டே மூலம் நிறைவேற்றிய பாஜக, நிதிஷ் குமாரால் பீகாரில் ஆட்சியை இழந்துவிட்டது. இது கட்சிக்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் 2024 மக்களவை தேர்தலில் பாஜக பீகாரை பெரிதளவு நம்புகிறது. அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெறும் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் ஆம் ஆத்மி கட்சி கவனம் செலுத்துகிறது.
இதனால் பாஜகவுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே நேரடி மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. டெல்லி கலால் வரி விவகாரத்தில் அது அப்பட்டமாக தெரிந்தது.
ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான பரப்புரை இலவசங்களுக்கு எதிரான பரப்புரையாக திரும்பியுள்ளது. இந்த இலவசங்களுக்கு எதிரான பரப்புரை தற்போது பாஜகவுக்கு எதிராக மாறியுள்ளது.
இது நல்லதல்ல என்று கட்சி்யின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார். மறுபுறம் பாஜக வலுவான வியூகங்களை வகுத்து வந்தாலும், பாஜகவுக்கு எதிராக தாக்குதல் தொடுக்கும் பிராந்திய தலைவர்களும் அதிகரித்து காணப்படுகின்றனர்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, பீகாரில் நிதிஷ் குமார், தெலங்கானாவில் கே. சந்திர சேகர் ராவ், தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் என பாஜகவுக்கு எதிராக தாக்குதல் தொடுக்கும் தலைவர்களின் பட்டியலும் நீள்கிறது.
ஆகையால் மக்களவை தேர்தலில் பாஜக கடுமையான போட்டியை சந்திக்கும் மாநிலங்களின் பட்டியலும் தற்போது அதிகரித்து காணப்படுகிறது.
அந்தப் பட்டியலில், தமிழ்நாடு (39), கேரளா (20), தெலுங்கானா (17), ஆந்திரப் பிரதேசம் (25), பீகார் (40), பஞ்சாப் (13), ஒடிசா (21), மற்றும் மேற்கு வங்கம் (42) என மொத்தம் 200க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.
இதற்கிடையில் ராகுல் காந்தியின் பாத யாத்திரை வெற்றிப் பெற்றால் அவர் வலுவான தலைவராக கூடும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
அதாவது திட்டமிட்டப்படி அவர் பாத யாத்திரை நடந்தால், அவர் பெரும் தொண்டர்களை திரட்ட முடியும். இது அவர் எதிர்க்கட்சிகளுக்கு தலைமையேற்க சாதகமாக முடியும். மேலும் பாஜக முதலமைச்சர் யாரும் மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
ஏனெனில் இவர்கள் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் நரேந்திர மோடியின் புகழை மட்டுமே நம்பியிருக்கின்றனர். இதற்கிடையில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மத்தியிலும் சில அதிருப்திகள் காணப்படுகின்றன.
பிராமண லாபியிலும் மகிழ்ச்சி இல்லை. இதற்கிடையில், பில்கிஸ் பானு வழக்கும் பாஜகவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி கட்சியின் மூத்தத் தலைவர், “வீர சிவாஜியின் வரலாறு கேட்டு நாம் வளர்ந்தோம். பெண்கள் கண்ணியமாக மதிக்கப்பட வேண்டும்.
இஸ்லாமிய பெண்களை பாதுகாப்புடன் திருப்பி அனுப்பியதுதான் நம் வரலாறு” என்றார். மேலும், “பெண்களின் முன்னேற்றத்துக்கு பிரதமர் பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளார். பெண்கள் மேம்பாட்டில் தீவிர அக்கறை செலுத்துகிறார். ஆனால் இதையெல்லாம் , அவை பாதிக்கிறது” என்றார்.
எனினும் பாஜக வலுவான நிலையில் மீண்டும் வெற்றி பெறும் என்றே அக்கட்சியின் மூத்தத் தலைவர் கூறினார். கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் படிப்பதில் பிரதமர் உள்பட அவருடன் இருப்பவர்கள் யாரும் சளைத்தவர்கள் அல்ல.
ஆகவே மீண்டும் உக்திகள் உருவாக்கப்படும். பாஜக அரசியல் வியூகங்களை ஏற்படுத்தும்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.