275 பேரின் உயிரைப் பறித்த ரயில் விபத்துக்கான மூல காரணம் மற்றும் அதற்கு காரணமானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் விசாரணை அறிக்கை விரைவில் தெரியவரும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
விபத்து நடந்த இடத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 4) காலை தூர்தர்ஷனுக்கு அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பேட்டியில், “ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (CRS) நேற்று அந்த இடத்தில் இருந்தார்.
அறிக்கைகளை பெற்று மூல காரணம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த வேலையைச் செய்தவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சிஆர்எஸ் விசாரணை அறிக்கை, விபத்துக்கான காரணமும் முன்கூட்டியே தெரியவரும்” என்றார்.
விபத்து தொழில்நுட்ப அல்லது மனிதப் பிழையா அல்லது சமூக விரோதிகளால் நடந்ததா என்ற கேள்விக்கு, வைஷ்ணவ், “இது குறித்து கருத்து சொல்வது சரியல்ல. அது முறையல்ல. நான், CRS அறிக்கையை சமர்ப்பித்த பின்னரே சொல்ல முடியும். ஆனால் விசாரணை முடிந்து விட்டது” என்றார்.
தொடர்ந்து, மம்தா பானர்ஜி (மேற்கு வங்க முதல்வர் மற்றும் முன்னாள் ரயில்வே அமைச்சர்) சனிக்கிழமை கூறிய கருத்துக்கும் விபத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.
ரயிலில் மோதலை தடுக்கும் கருவி பொருத்தப்பட்டிருந்தால் விபத்தை தடுத்திருக்கலாம் என மம்தா பானர்ஜி சனிக்கிழமை கூறியிருந்தார்.
இந்த நிலையில் வைஸ்ணவ், “நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன் - இந்த விபத்து மோதல் தவிர்ப்பு அமைப்பு பற்றியது அல்ல," என்று அவர் கூறினார்.
இந்த வேதனையான விபத்து குறித்து அமைப்பின் அறிக்கை சமர்பிக்கப்பட்ட பிறகே அதுபற்றி நான் கருத்து தெரிவிப்பேன்” என்றார்
ஒடிசாவின் பாலசோரில் உள்ள மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சனிக்கிழமை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, “ரயில் விபத்து சம்பவத்தில் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவரும் தப்ப முடியாது” என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“